×

விற்பனைக்காக குவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் தமிழ்நாடு அரசு திட்டங்களை பிற மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன நம்பியூரில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை திறப்பு

கோபி,மார்ச் 7: கோபி அருகே உள்ள நம்பியூரில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை கோபி டிஎஸ்பி தங்கவேல் திறந்து வைத்தார். கோபி அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சியானது கோபி-கோவை சாலையில் அமைந்துள்ளது. இதனால் இரவு, பகலாக இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. மேலும் அதிகளவில் விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுவதோடு, விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனங்கள் தப்பிச்செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

மேலும் கொலை, கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்வதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் நம்பியூர் பேரூராட்சி எல்லை பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் நடவடிக்கை எடுத்தார். அதைத்தொடர்ந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொன்னமடை, புளியம்பட்டி சாலை, கோவை சாலை, கொளப்பலூர் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டமாக 60 கேமராக்கள் பொருத்தும் பணி கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை நம்பியூர் பழைய காவல் நிலைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டது. கேமரா பொருத்துதல், கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து நேற்று கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்றது. கோபி டிஎஸ்பி தங்கவேல் கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். முன்னதாக ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட நம்ம நம்பியூர் என்ற பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நம்பியூர் பேரூர் கழக திமுக செயலாளர் ஆனந்தகுமார், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சென்னியப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அல்லாபிட்சை, நம்பியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜவஹர், பேரூராட்சி துணைத்தலைவர் தீபா, பேரூராட்சி கவுன்சிலர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.

The post விற்பனைக்காக குவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் தமிழ்நாடு அரசு திட்டங்களை பிற மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன நம்பியூரில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu Govt ,Nampur ,Gobi ,DSP ,Thangavel ,Nambiur ,Nambiur Municipal Corporation ,Gobi-Coimbatore road ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு