×

ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு உதவுவதாக கூறி கால் சென்டர் நடத்தி ஒரே ஆண்டில் ₹10 கோடி மோசடி செய்த 2 பேர் கைது:  தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை  வசூல் பணத்தில் சொகுசு வாழ்க்கை அம்பலம்

பெரம்பூர், மார்ச் 7: பெரம்பூரில் ஆதரவற்றோருக்கு உதவுவதாகக் கூறி கால் சென்டர் நடத்தி ₹10 கோடி மோசடி செய்த 2 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் வசூலான பணத்தில் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த முத்து (41) சேப்பாக்கத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு பெண், அனாதை ஆசிரமத்தில் பணிபுரிவதாகவும், ஆதரவற்ற பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள், குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறும் கேட்டுள்ளார்.

மேலும், தங்களது நிறுவனத்தின் கூகுள் பே நம்பரை அனுப்பி அதில் பணம் செலுத்துமாறு அந்த பெண் கூறியுள்ளார். டிரஸ்ட் சம்பந்தமான ஆவணங்களையும், புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்‌. தொடர்ந்து 2 நாள் அந்த பெண் பேசி வந்த காரணத்தினால் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த முத்து, நேரில் வந்தால் பணம் தருகிறேன் எனக் கூறியுள்ளார். அதன்படி அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நபர் முத்துவை சென்று பார்த்து ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டார். அந்த நபரை பார்த்ததும் முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தினங்கள் கழித்து பெரம்பூர் பட்டேல் சாலையில் அவர்கள் கூறிய முகவரிக்குச் சென்று முத்து பார்த்துள்ளார். அங்கு சுமார் 20 பெண்கள் மாறிமாறி போன் செய்து அனைவரிடமும் நாங்கள் ஆசிரமம் வைத்துள்ளோம், பணம் அனுப்புங்கள் எனக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து முத்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இந்த புகாரை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் நேரில் சென்று விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கீழ்ப்பாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதியில் குறிப்பிட்ட இந்த நிறுவனம் வயதானவர்களை வைத்து ஹோம் நடத்தி வருவதும், அதனை வைத்து பலரிடம் பணம் வாங்கி நூதன முறையில் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் இயக்குனரான சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி (45) என்ற நபரை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பல இடங்களில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் கொடைக்கானலில் மறைந்திருந்த கோபியை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது காப்பகத்தில் பணிபுரிந்த சூபர்வைசரான எண்ணூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (32) என்ற நபரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவர்களுக்கு சுமார் ₹10 கோடி வரை வருமானம் வந்துள்ளதும், அதில் பெரும்பாலான பணத்தை கோபி தனது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதும், அதில் அவர் மற்றும் அவரது குடும்பம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கோபி மற்றும் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கோபி கடந்த 10 வருடத்திற்கு மேலாக இதுபோன்ற ஆசிரமத்தை நடத்தி வந்துள்ளதால் பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பார்த்து உதவி செய்யுங்க…
பொதுமக்களின் பணம் காப்பகங்கள் என்ற பெயரில் ஏமாற்றப்படுவது குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் கூறுகையில், ‘‘கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு உதவி செய்கிறோம் எனக் கூறி சிலர் இப்படி ஏமாறுகின்றனர். இதுபோன்று பொதுமக்களின் பணத்தை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். எனவே கருணையின் அடிப்படையில் தரும் பணம், பாதிக்கப்பட்ட நபர்களை சென்றடைகின்றதா என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு உதவி செய்ய வேண்டும். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பணம் தரச் சொல்லி வற்புறுத்துபவர்கள் குறித்து பொதுமக்கள் போலீசாரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இதுபோன்று பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குழந்தைகளுக்கு ஆபரேஷன் என போலியாக விளம்பரம் செய்து பணத்தை சுரண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

The post ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு உதவுவதாக கூறி கால் சென்டர் நடத்தி ஒரே ஆண்டில் ₹10 கோடி மோசடி செய்த 2 பேர் கைது:  தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை  வசூல் பணத்தில் சொகுசு வாழ்க்கை அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Perampur ,Tiruvallikeni… ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு