×

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாமல் 100 தொழில் அதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பத்னாவர்: விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் 100 தொழில் அதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை தற்போது மத்தியபிரதேசத்தில் நடந்து வருகிறது. அங்கு பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தார் மாவட்டம் பத்னாவர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி நேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “பஞ்சாப், அரியானா மாவட்டங்களில் இருந்து வந்து போராடும் விவசாயிகளின் ஒரே கோரிக்கை அவர்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தர வேண்டும் என்பதே. ஆனால் இதை தர பாஜ அரசு மறுக்கிறது. விவசாயிகள் வாங்கி கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி அரசு 100 தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தொகை 24 ஆண்டுகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியாகும்.

2024 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் நிச்சயம் உருவாக்கப்படும். நாட்டிலுள்ள தலித், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நிதி நிலைமை, பல்வேறு நிறுவனங்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் ஆகியவற்றை கண்டறிய சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். சமூக, பொருளாதார அம்சங்களில் நீதியை நிலைநாட்ட உறுதிப்பூண்டுள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

எங்களுடன் நின்று ஆதரவளிக்கும் உங்களுக்காக உழைக்க காங்கிரஸ் விரும்புகிறது. நீர், நிலம், காடுகளை காப்பாற்றுவதற்கான உங்கள் போராட்டத்தில் காங்கிரஸ் உங்களுக்கு நிச்சயம் துணை நிற்கும்” என்று உறுதி அளித்தார்.

மக்களவை தேர்தலில் ராகுல் அமேதியில் போட்டி?
உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதி யில் இருந்து 2002ம் ஆண்டு முதல் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட ராகுல் கடந்த 2019ம் ஆண்டு பாஜவின் அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந் தார். இவர் கேரள மாநிலம், வயநாட்டிலும் போட்டியிட்டு இருந்ததால் அங்கு வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் வருகிற மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரதிப் சிங்கால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் மூலம் திருடிய பாஜ: கார்கே
ராகுல் யாத்திரையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதாவது: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பாஜ சொல்வதைக் கேட்டு, யாருக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டன என்கிற தகவலை வெளியிடாமல் உள்ளது. நீங்கள் ஏன் நிதி தந்தவர்களின் பெயர்களை மறைக்கிறீர்கள்? ஏனென்றால் அவர்கள் (பாஜ) தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையை மிரட்டி திருடி வசூலித்துள்ளனர். இந்த கொள்ளையை தொடர விரும்புவதால் நீதிமன்றத்திடம் பெயர்களை வெளியிட அவகாசம் கேட்கின்றனர்.

மற்ற கட்சி தலைவர்களை பாஜ தன் பக்கம் இழுத்து வருகிறது. மற்ற கட்சியில் இருக்கும் போது அவர்களை கறைபடிந்தவர்களாக கூறும் பாஜ, தன்பக்கம் சேர்ந்ததும் அவர்கள் சுத்தமானவர்களாக கருதுகிறது. அதிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பெரிய வாஷிங்மெஷின் உள்ளது. அந்த வாஷிங்மெஷின் மூலமாக வரும் கறைபடிந்த தலைவர்களை அப்பழுக்கற்றவர்களாகி விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாமல் 100 தொழில் அதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Patnawar ,Rahul Gandhi ,Modi government ,PRESIDENT ,SOLIDARITY ,MADHYA PRADESH ,Rakulganti ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…