×

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் 1ம் வகுப்பில் 36,000 குழந்தைகள் சேர்ப்பு

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கையில் 1ம் வகுப்புகளில் இதுவரை 35 ஆயிரத்து 809 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடவடிக்கை மார்ச் 1ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாெமொழி கலந்து கொண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணி தொடங்கி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் 2024-2025ம் கல்வி ஆண்டில் 5 வயது நிரம்பிய குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

மார்ச் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 35 ஆயிரத்து 809 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம் 4,236, கள்ளக்குறிச்சி 4,057, கிருஷ்ணகிரி 3,543, கன்னியாகுமரி 3,096, திருச்சி 1,959, திருப்பூர் 1,413, நாமக்கல் 1,296, திருவண்ணாமலை 1,092, மதுரை 1001 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர காஞ்சிபுரம் 856, செங்கல்பட்டு 615, சென்னை 394, திருவள்ளூர் 364, குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோடை விடுமுறைக்கு முன்பே சிறப்பு முகாம்கள் நடத்தி ஆசிரியர்களுக்கும் பொறுப்புகள் வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் 1ம் வகுப்பில் 36,000 குழந்தைகள் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...