×

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதுவோர் தக்கல் கட்டணம் ரத்து: கால அவகாசம் 15 நாளாக நீட்டிப்பு

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10, மற்றும் பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவ மாணவியர் மீண்டும் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்க காலதாமதமானால், சிறப்புக் கட்டணம் (தக்கல்) செலுத்தி விண்ணப்பிக்கும் முறை இருந்தது. இதற்கு 7 நாள் கால அவகாசத்தை தேர்வுத்துறை அளித்து வந்தது. இந்த விதிகளை திருத்தி தக்கல் கட்டணத்தை ரத்து செய்தும், கால அவகாசத்தை நீட்டித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: மேனிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணத்துடன் சேர்த்து சிறப்பு ஒதுக்கீட்டு கட்டணமாக ரூ. 1000 வசூலிக்கவும், 10ம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வு, 8ம் வகுப்பு தேர்வு ஆகியவற்றுக்கு சிறப்பு ஒதுக்கீட்டுக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கவும், கல்வித்துறையின் சார்பில் கடந்த 2003ல் ஆணையிடப்பட்டது. இந்நிலையில், 2023ல் பிளஸ் 2 தேர்வு எழுத நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 30 பேரும், அரசுப் பள்ளிகளை சேர்ந்த 104 பேரும், பிளஸ் 1 தேர்வு எழுத நிதியுதவி பள்ளிகளை சேர்ந்தவர்கள் 154, அரசுப் பள்ளிகளை சேர்ந்த 375 பேரும், 10ம் வகுப்பு தேர்வுக்கு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்தவர்கள் 232 பேரும், அரசுப் பள்ளிகளை சேர்ந்தவர்கள் 386 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

அதனால், காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தக்கல் கட்டணத்தை நீக்கவும், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அளவை 7 முதல் 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம் என்றும் உடனடியாக துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவ மாணவியருக்கு தக்கல் முறை கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கருத்துருவை ஏற்று மார்ச், ஏப்ரல் பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கும் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அளவை 7ல் இருந்து 15 நாள்களாக நீட்டித்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு தக்கல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தும் அரசு ஆணையிடுகிறது.

The post பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதுவோர் தக்கல் கட்டணம் ரத்து: கால அவகாசம் 15 நாளாக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…