சென்னை: தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், நீட், ஐ.ஐ.டி, போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் திறம்பட எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், ஒன்றிய அரசின் போட்டித்தேர்வுகள் முழுவதும் என்.சி.இ.ஆர்.டி எனும் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகிறது.
மற்ற மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை அமலில் உள்ள நிலையில், தமிழக மாணவர்களின் நலனை கருதி, மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற பயிற்று மொழியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அடைய முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜரானார். தமிழகத்தில் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி 2022ல் இதே மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதை மறைத்து புதிய மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர். அபராத தொகை குறித்து தெரிவிக்கப்படவில்லை.
The post தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.