×

இந்தியா – இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

தர்மசாலா: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் தர்மசாலா, இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்ந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. இங்கிலாந்து முதல் டெஸ்டில் 28 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்ற நிலையில், அடுத்து நடந்த 3 டெஸ்டிலும் இந்தியா 106 ரன், 434 ரன், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் – பயிற்சியாளர் மெக்கல்லம் கூட்டணியின் ‘பாஸ்பால்’ அதிரடி வியூகத்தை உடைத்து நொறுக்கிய உற்சாகத்துடன், ரோகித் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 4வது வெற்றிக்கு வரிந்துகட்டுகிறது. இளம் வீரர்கள் யாஷஸ்வி, கில், சர்பராஸ், துருவ் ஜுரெல், அனுபவ ஸ்பின்னர்கள் ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் சிறப்பாக பங்களித்து வருவது இந்திய அணிக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

அதே சமயம், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் முனைப்புடன் களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. ரூட், ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ், டக்கெட், கிராவ்லி, பேர்ஸ்டோ கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆண்டர்சன், ராபின்சன், வுட் வேகத்தை விடவும், அதிக அனுபவம் இல்லாத ஹார்ட்லி, சோயிப் பஷிர் சுழற்பந்துவீச்சையே இங்கிலாந்து அதிகம் நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் பின்தங்கியுள்ளதால் இங்கிலாந்து அணி கூடுதல் நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

இந்தியா: ரோகித் (கேப்டன்), துருவ் ஜுரெல், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்கள்), ஜெய்ஸ்வால், கில், பத்திதார், சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல், ஜடேஜா, அஷ்வின், அக்சர், குல்தீப் , பும்ரா, சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து : ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலிவர் போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷிர்.

* 92 ஆண்டுகள் 135 டெஸ்ட்கள்: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் மோதல் 1932ல் தொடங்கியது. 92 ஆண்டுகளில் இரு அணிகளும் 135 டெஸ்டில் மோதியுள்ளன. அவற்றில் இங்கிலாந்து 51 – 34 என முன்னிலை வகிக்கிறது (50 டெஸ்ட் டிரா).
* 36 தொடர்கள் 12 வெற்றிகள்: நடப்பு தொடருடன் இதுவரை 36 தொடர்களில் மோதியுள்ளதில், முதல் 30 ஆண்டுகள் நடந்த 7 தொடர்களில் 6ல் இங்கிலாந்து வென்றது. 1952ல் நடந்த ஒரு தொடர் டிராவானது. இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் மற்றும் ஒரே டெஸ்ட் வெற்றியும் அந்த தொடரில்தான் கிடைத்தது.
* இந்தியா 12 தொடர்களையும், இங்கிலாந்து 19 தொடர்களையும் வென்றுள்ள நிலையில் 5 தொடர்கள் டிராவில் முடிந்தன.
* 100 டெஸ்ட் நாயகர்கள்: இன்று தொடங்கும் 5வது டெஸ்ட் ஆர்.அஷ்வின் (இந்தியா), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து) இருவருக்கும் 100வது டெஸ்ட் என்பதால் இப்போட்டி தனிச்சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது.

The post இந்தியா – இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,England ,Dharamsala ,Himachal Pradesh Cricket Association Stadium ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!