×

மாணவிகள் குறித்து அவதூறு வீடியோ பாஜ பெண் நிர்வாகி கைது

திருச்சி: எக்ஸ் வலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்ட திருச்சி பாஜ பெண் நிர்வாகியை சைபர் க்ரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் அருண் என்பவர் நேற்று முன்தினம் எஸ்பி வருண்குமாரிடம், அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி என்பவர் அவரது ‘எக்ஸ்’ வலைதளத்தில், மனது வலிக்கிறது. வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது.

தமிழகத்திற்கு சாபக்கேடு என்று பதிவிட்டு, அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள் சீருடையுடன் கையில் பாட்டிலில் மது போன்ற பானத்தை வைத்து குடிப்பது போன்று காட்சி உள்ளது. இதனை மார்ச் 4ம் தேதி மாலை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும்போது, யாரோ மதுபானம் போன்ற திரவத்தை மாணவிகளிடம் கொடுத்து, குடிக்க சொல்லி வீடியோ எடுத்து அந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதுபோல் தெரிய வருகிறது.

குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாகவும், அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பொது அமைதியை கெடுக்கும் விதமாகவும் இந்த வீடியோ மற்றும் பதிவு உள்ளது. ஏதோ உள்நோக்கத்துடன் வதந்தியை அவர் பரப்பி உள்ளார். இது தொடர்பாக அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின்பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், சவுதாமணி மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து நேற்று அவரை கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக ஏற்கனவே சவுதாமணி மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post மாணவிகள் குறித்து அவதூறு வீடியோ பாஜ பெண் நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Trichy ,District ,DMK ,Information Technology Coordinator ,Arun ,SP ,Varunkumar ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...