×

கஞ்சா போதையால் பறிபோன உயிர்; பலாத்கார முயற்சியில் சிறுமி கொலை: போராட்டத்தால் ஸ்தம்பித்தது புதுச்சேரி

புதுச்சேரி: கஞ்சா போதையில் பலாதாரம் செய்ய முயற்சித்து சிறுமியை கொன்ற முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்காத என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து நகர் முழுவதும் போராட்டம் நடந்ததால் புதுச்சேரி ஸ்தம்பித்தது. புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி கடந்த 2ம் தேதி மதியம் வீட்டின் வெளியே விளையாடியபோது மாயமானார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கும் சாக்கடை கால்வாயில் மாயமான சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக ஆம்புலன்சில் ஏற்றினர். ஆனால் ஆம்புலன்சை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து, கொலையாளியை கைது செய்யக்கோரி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக கஞ்சாவுக்கு அடிமையான 5 பேரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் கஞ்சா அடித்துவிட்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்து மூட்டை கட்டி வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் விசாரித்தனர். குறிப்பாக அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (59), கருணாஸ் (19) மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை விவேகானந்தன் ஆசைவார்த்தை கூறி வீட்டிற்குள் அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்ததும், இதைப் பார்த்த கருணாஸ் உள்ளே வந்து சிறுமியை கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் பலாத்கார முயற்சியில் மயங்கி விழுந்த சிறுமியை, 2 பேரும் கொன்று கை, கால்களை கட்டி மூட்டை கட்டி வாய்க்காலில் தூக்கி வீசியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் கொலை, போக்சோ, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் போதைப்பொருட்களை தடுக்காத என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்தும், சிறுமி கொலைக்கு விரைவாக நீதி வழங்கக்கோரியும் புதுச்சேரி முழுவதும் அரசியல் கட்சியினர், ஜனநாயக மாதர் சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர், கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் போராட்டம், சாலை மறியல், காவல் நிலையம் முற்றுகை, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் என அடுத்தடுத்து நடத்தினர். புதுச்சேரி கடற்கரை சாலை வியாபாரிகள் சங்க சார்பில் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் மீண்டும் கடை இருக்கும் இடத்தில் வந்து கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து முடங்கி நகரமே ஸ்தம்பித்தது.

இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்த சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வாங்க மறுத்து மருத்துவமனையிலேயே போராட்டம் நடத்தினர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைத்தனர். இந்நிலையில், சிறுமி கொலை வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார்.

₹20 லட்சம் நிவாரணம்
முதல்வர் ரங்கசாமி, சிறுமியின் தந்தையை தலைமை செயலகத்துக்கு நேரில் அழைத்து ஆறுதல் கூறி முதல்கட்டமாக ₹20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.

எதிர்க்கட்சிகள் நாளை பந்த்
சிறுமி கொலைக்கு காரணமான போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்காத என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து அதிமுக மற்றும் இந்திய கூட்டணி சார்பில் நாளை பந்த் நடக்கும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளனர். இதேபோல் சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதுச்சேரி திமுக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார். சிறுமி கொலைக்கு ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

வெளியேறு, வெளியேறு என தமிழிசை சிறைபிடிப்பு: மக்கள் மீதுபோலீஸ் தடியடி
தெலங்கானாவில் இருந்த கவர்னர் தமிழிசை நேற்று மாலை சிறுமியின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றார். அப்போது அவரை வழி மறித்து வெளியேறு, வெளியேறு என மக்கள் கோஷமிட்டனர். மேலும், ‘சம்பவம் நடந்து பல நாட்களாகிவிட்டது. இப்போது ஏன் வந்தீர்கள், வெளியே போ…வெளியே போ…’ என தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் தமிழிசை மேற்கொண்டு சிறுமியின் சடலம் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு, செல்ல முடியாமல் தவித்தார். உடனே அங்கு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து சிறுமியின் சடலத்துக்கு மாலை அணிவித்து தமிழிசை அஞ்சலி செலுத்தினார். அப்போது சுற்றியிருந்தவர்கள், சிறுமி இறந்து 4 நாட்களுக்கு பிறகு இப்போது போட்டோவுக்கு போஸ் கொடுக்க வந்தீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் புறப்பட்ட தமிழிசை வேறு வழியில் சென்றார். அங்கும் செல்ல முடியாதபடி சாலையில் அமர்ந்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி போலீசார், போராட்டக்காரர்களை, லேசான தடியடி நடத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து பாதுகாப்பாக புறப்பட்டு சென்றார்.

The post கஞ்சா போதையால் பறிபோன உயிர்; பலாத்கார முயற்சியில் சிறுமி கொலை: போராட்டத்தால் ஸ்தம்பித்தது புதுச்சேரி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,NN ,R. Puducherry ,Congress ,Baja coalition government ,Muthialpettai ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு