×

ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

சென்னை: மனிதர்களும் ஏஐ தொழில்நுட்பமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில் ‘உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐஓடி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி போக்குகள்’ என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் பல்கலை வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அதேவேளையில் அதை தவறாக பயன்படுத்தக்கூடிய அபாயங்களும் இல்லாமல் இல்லை. தவறான பயன்பாடுகளை சமூக வலைத்தளங்களில் நன்கு காண முடியும்.

ஐஓடி எனப்படும் இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் தொழில்நுட்பம் தொழில்துறையில் குறிப்பாக மின்சாரத்துறையில் பெருமளவு பயன்படுகிறது. இதனால் மின்சாரம் சேமிக்கப்பட்டு செலவினங்கள் குறைகின்றன. தொழில்நிறுவனங்களில் மட்டுமின்றி சாதாரணமாக வீடுகளில்கூட ஐஓடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலன்பெறலாம். அதேபோல், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்றைய தினம் ஒட்டுமொத்தமாக அனைத்து தொழில்நுட்பங்களையும் அடியோடு மாற்றிபோட்டுவிட்டது. ஏஐ தொழில்நுட்பத்தை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. மனிதர்கள் அளிக்கும் தரவுகளுக்கு ஏற்பவே ஏஐ தொழில்நுட்பம் இயங்குகிறது. மனிதர்களும் ஏஐ தொழில்நுட்பமும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.

The post ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து appeared first on Dinakaran.

Tags : Minister Palanivel Thiagarajan ,Chennai ,Anna University Research Center ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...