×

போதை மாத்திரை விற்பனை விவகாரம் கும்பல் தலைவனை பிடிக்க குஜராத் விரைந்தது தனிப்படை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

பள்ளிப்பாளையம்: குஜராத்தில் இருந்து நாமக்கல்லுக்கு போதை மாத்திரைகளை கொரியர் சர்வீஸ் மூலம் வாங்கி விற்பனை செய்த விவகாரத்தில் கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை போலீசார் குஜராத் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.10க்கு மாத்திரைகளை வாங்கி ரூ.300க்கு விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசின் அதிரடி உத்தரவுகள் மற்றும் போலீசாரின் துரித நடவடிக்கையால் தற்போது கஞ்சா கடத்தல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துகிறவர்கள், போதை மாத்திரைகளை அதிக அளவில் நாடி வருகின்றனர். எனவே மாத்திரைகள் விற்பனை தொடர்பாக மருந்தகங்களுக்கும் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. டாக்டர்கள் கடிதம் இல்லாமல் போதை தரும் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட மாநிலங்களில் இருந்து இதுபோன்ற போதை தரும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் போதைப் பொருள் மற்றும் ேபாதை மாத்திரைகளை விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஒரு கும்பல் குஜராத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பள்ளிப்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த கவுதம் (32), என்பவரது தலைமையிலான கும்பல், போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனையிட்டபோது 9200 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டைச்சேர்ந்த பரத்குமார், அசோக்குமார் ஆகியோரிடம், போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளார். அது நல்ல போதை தருவதால், மாத்திரையை பிறருக்கு விற்பனை செய்தும் நல்ல வருமானம் பார்த்துள்ளார் என்பது தெரியவந்தது.

பரத்குமார், அசோக்குமார் இருவருமே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஈரோட்டில் தங்கி போதை மாத்திரைகளை குஜராத்தில் இருந்து வாங்கி விற்பனை செய்துள்ளனர். அவர்கள் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (எ)சித்திக் சவுத்ரியின் தொடர்பு கவுதமுக்கு கிடைத்துள்ளது. அவர்தான் குஜராத்தில் இருந்து போதை மாத்திரைகளை தமிழகத்துக்கு அனுப்பியுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக கவுதம், தினேஷ்குமாரிடம் ஒரு வில்லையை (10 மாத்திரை) ரூ.500க்கு வாங்கி, ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

குறிப்பாக பள்ளிபாளையத்தில் உள்ள தறித்தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மாத்திரையை ரூ.10க்கு வாங்கி ரூ.300க்கு விற்றுள்ளார். இதற்காக கவுதம் தனக்கு கீழ் மாதவன், கவுரிசங்கர், தென்னரசு, சசி, கிரிதரன், தீபன், கவுதம், சுஜித், யுவராஜ், இளையாஸ், விக்கி உட்பட 15 பேரை வேலைக்கு வைத்திருந்ததும் விசாரணையில் அம்பலமானது. அவர்கள் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள்தான் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் போதை மாத்திரைகளை தறித்தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வாரம் ஒருமுறை குஜராத்தில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகள் வரும்.

அதை எங்கள் பெயருக்கு வாங்கினால் மாட்டிக் கொள்வோம் என்பதால் பலரது பெயர்களில் வாங்குவோம். எல்லாமே போலி பெயர்கள்தான். ஆனால் அதில் தொலைபேசி எண் மட்டும் எங்களுக்கு தெரிந்தவர்களின் எண்ணை கொடுப்போம். இதனால் நாங்கள் கொடுத்த முகவரி இல்லை என்று கொரியர் ஊழியர் எங்களுக்கு போன் செய்வார். நாங்கள் சென்று வாங்கிக் கொள்வோம் என்று தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி நேற்று கொரியரில் வந்த 5 ஆயிரம் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கைது செய்யப்பட்ட கவுதம் உள்பட 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பது குஜராத்தில் இருந்து அனுப்பும் தினேஷ்குமார்தான். இதனால் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். உயரதிகாரிகளின் ஆலோசனப்படி எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஐந்து பேர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் நேற்று மதியம் சென்னையிலிருந்து விமானத்தில் குஜராத் மாநிலம் புறப்பட்டனர். அவர்கள் அகமதாபாத்தில் இரண்டொரு நாட்கள் தங்கியிருந்து குற்றவாளியை கண்காணித்து குஜராத் மாநில போலீசாரின் உதவியோடு பிடித்து விசாரணைக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளனர்.

டாக்டர்கள் அனுமதி இல்லாமல் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முடியாது. இதனால் இந்த போதை மாத்திரை விற்பனைக்குப் பின்னால் பெரிய கும்பல் செயல்படுகிறது. தினேஷ்குமாருக்கு அரசியல் தொடர்பும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போதைக் கடத்தல் பின்னணியில் குஜராத் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே நீதிமன்றம் மூலமும் தினேஷ்குமாரை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

* கைதானவர்களுக்கு தொடர்பு உள்ளதா?
போதை மாத்திரை விவகாரம் தொடர்பாக வெப்படை போலீசார் 10 பேரை கைது செய்தனர். இது போலவே பள்ளிபாளையம் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 9,200 மாத்திரைகளையும் போலீசார் கைப்பற்றினர். சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த 2பேர் போதை மாத்திரை விற்பனையில் கைதாகி சிறையில் உள்ளனர். அவர்களுக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* முகவரியில் குழப்பம் இருந்தால் கொடுக்கக்கூடாது
பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் கொரியர் பார்சல் நிறுவனங்களை அழைத்து விசாரித்த போலீசார், வெளிமாநிலங்களில் இருந்து வரும் கொரியர் பார்சல்களை சரியான முகவரி இல்லாத சந்தேகப்படும் நபர்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வழங்க கூடாது என எச்சரித்துள்ளனர். மேலும் போதை மாத்திரை கும்பலின் நடவடிக்கையால் பொதுமக்கள் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணித்து வரவேண்டுமெனவும், பழக்கமில்லாத நபர்களுடன் தங்கள் குழந்தைகள் பழகுவதை தவிர்க்க வேண்டுமெனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

The post போதை மாத்திரை விற்பனை விவகாரம் கும்பல் தலைவனை பிடிக்க குஜராத் விரைந்தது தனிப்படை: விசாரணையில் திடுக்கிடும் தகவல் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Pallipalayam ,Namakkal ,
× RELATED ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில்...