×

மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

சென்னை: மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மக்களவை தேர்தலுக்கான தேதி இம்மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட பேச்சு வார்த்தையில், 7 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என அதிமுகவிடம் தேமுதிக வலியுறுத்தி இருந்தது. இதனிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அறிவித்துள்ளார். இக்குழுவில், தேமுதிக கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ், அவைத்தலைவர் டாக்டர்.வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம்.R. மோகன்ராஜ் மற்றும் துணைச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. அதிமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் தேமுதிக குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பென்ஜமின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி உள்ளிட்ட 4 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு பங்கேற்றுள்ளது.

கடந்த 1-ம் தேதி தேமுதிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை பதவி தொடர்பாக தேர்தலுக்கு பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டதாக தெரிகிறது.

The post மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Adimuka ,Demutika ,Lok Sabha ,Chennai ,India ,BJP ,National Democratic Alliance ,Congress ,Dimuka ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்