×

கால்வாயில் ட்ரோன் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியினைத் அமைச்சர், மேயர் தொடங்கி வைத்தனர்


சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள், மேயர் ஆர். பிரியா அவர்கள் இன்று (06.03.2024) திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் புனிதவதி எத்திராஜன், எல்.ரமணி, மாநகர அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், தலைமைப் பூச்சித்தடுப்பு அலுவலர் டாக்டர் செ. செல்வகுமார், மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேயர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது: கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்திற்கு பிறகு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், நீர்நிலைகள், கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்களில் தொடர்ந்து கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில் தற்போது கொசுப்புகை மருந்து அடித்தல், கொசுக்கொல்லி மருந்து தெளித்தல் பணிகள் வீடுவீடாக சென்று தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளித்தல் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு பணிக்கென 410 மருந்து தெளிப்பான்கள், 109 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 287 ஸ்ப்ரேயர்கள், 219 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 68 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வட்டாரத்திற்கு இரண்டு என 6 ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டும் 6 ட்ரோன் இயந்திரங்கள் மூலம் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மலேரியா பணியாளர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று கொசுப்புழு வளரிடங்களான, மேல்நிலை/கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் போன்றவைகள்) ஆகியவற்றை கண்டறிந்து கொசுப் புழுக்கள் இருப்பின் அதனை அழித்திடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரித்திட தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 31 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்து இதுவரை 18 நபர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

The post கால்வாயில் ட்ரோன் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியினைத் அமைச்சர், மேயர் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mayor ,Chennai ,Minister of ,Hindu ,Religion and Charities ,P.K. Shekhar Babu ,R. Priya ,V.K. ,Otteri Nalla canal ,Dinakaran ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!