×

மக்களவை தேர்தல்!: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக.. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்..!!

சென்னை: தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில், பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகளுமே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை பதவியும் தேமுதிக கேட்கிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. விரும்பிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் இணைவோம் என தேமுதிக உறுதியாக நிற்கிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் என 4 தொகுதியையும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேமுதிக கேட்கிறது. இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க அதிமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பதிலாக, மதுரை தொகுதியை கூடுதலாக ஒதுக்க தேமுதிக தலைமை வலியுறுத்தியுள்ளது. இதேபோல், தேமுதிக பட்டியலிட்ட தொகுதிகளில் விழுப்புரம், கடலூர் என சில தொகுதிகளில் போட்டியிட பாமகவும் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தற்போது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். இந்த குழுவில் தேமுதிக துணை செயலாளராக இருக்கக்கூடிய எல்.கே.சுதீஷ், அவை தலைவர் டாக்டர்.வி.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகிய 4 பேர் இடம்பெற்றிருப்பதாக தேமுதிக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் தேமுதிக கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருந்தது. அந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்த குழுவினர் இடம்பெற்று எந்தெந்த தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தல்!: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக.. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Demudika ,Supreme Leader ,Secretary General ,Premalatha Vijayakanth ,Chennai ,Demutika ,Dimuka ,Adimuka ,BJP ,Great Alliance ,Dinakaran ,
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13...