×

உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்தம்.. சுற்றுலா சென்ற இடத்தில் ஏமாற்றப்பட்ட தங்களை மீட்கக்கோரி 7இந்தியர்கள் வீடியோ வெளியீடு..!!

கீவ்: உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்தம் செய்வதாக அங்கு சென்ற இந்தியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் தாக்குதல் நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தாலும் அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. இந்த போரில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். ஒன்றிய அரசின் முயற்சியால் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே போல இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர், ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் சிக்கி உள்ளனர். அவர்கள் வலுக்கட்டாயமாக உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

அவர்கள் ககன்தீப் சிங்(24), லவ்பிரீத் சிங்(24), நரைன் சிங்(22), குர்பிரீத் சிங்(21), ஹர்ஷ் குமார்(20), அபிஷேக் குமார்(21), மற்றுமொரு குருபிரீத் சிங்(23) ஆகியோர் போரில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 5 பேர் பஞ்சாபையும், மற்ற 2 பேர் ஹரியானாவையும் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு டிச.27ல் புத்தாண்டை கொண்டாட அவர்கள் ரஷ்யா சென்றுள்ளனர். அதற்காக விசா பெற்றுள்ளனர். அங்கிருந்து, அவர்களை பெலாரஸ் நாட்டிற்கு ஏஜென்ட் அழைத்துச் சென்றுள்ளார். அந்நாட்டிற்கு செல்வதற்கு அவர்களிடம் விசா இல்லை. ஆனால், விசா தேவை என்ற தகவலும் தங்களுக்கு தெரியாது என்கின்றனர். விசா இல்லாமல் பெலாரஸ் சென்ற இடத்தில் ஏஜென்ட் கூடுதல் பணம் கேட்டுள்ளார்.

அதை கொடுக்காததால் அந்த இடத்திலேயே 7 பேரையும் விட்டுவிட்டு ஏஜென்ட் தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்தனர். ரஷ்ய ராணுவ அதிகாரிகள், அவர்களிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கி உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தி உள்ளனர். பணி நிமித்தமாக ரஷ்யா சென்றுள்ள தங்களை உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்திக்கிறது என புகார் கூறியுள்ளனர். தங்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சமூக வலைதளம் வாயிலாக ராணுவ சீருடையுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

The post உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்தம்.. சுற்றுலா சென்ற இடத்தில் ஏமாற்றப்பட்ட தங்களை மீட்கக்கோரி 7இந்தியர்கள் வீடியோ வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,Kiev ,Indians ,7Indians ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...