×

கமலை ஞானப்பிரகாசர் நூல் உருவான வரலாறு

என்னென்ன பூக்கள், அவைகளை எப்போது எடுக்க வேண்டும், எந்தெந்தத் தெய்வங்களுக்கு எந்தெந்தப் பூக்கள் கொண்டு வழிபட வேண்டும் எனும் தகவல்களைச் சொல்லும் நூல் “புட்ப விதி’’. மலர்களால் தொடுக்கப்படும் பலவகை மாலைகளின் தன்மையைக் கூறும் நூல், “பூமாலை’’. சிவனடியார்கள் செய்ய வேண்டிய அனுஷ்டான முறைகளை விவரித்துச் சொல்லும் நூல், “அனுஷ்டான விதியகவல்’’. சிவபெருமானைப் பூஜை செய்ய வேண்டிய முறைகள் என்ன? என்பதைத் தெளிவாகக் கூறும் நூல், “சிவபூசையகவல்’’. இவற்றைத்தவிர, ஆன்மாவைப் பற்றிய அபூர்வமான தகவல்களைச் சொல்லும் நூல்கள்! இவ்வளவு ஞான நூல்களையும் எழுதியவர், “கமலை ஞானப்பிரகாசர்’’ எனும் மகான். 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருவாரூரில் அவதரித்தவர் இவர்.

ஆகம நூல்கள், ஞான நூல்கள் என நூல்கள் அனைத்தையும் கற்று அறிந்து, அவைகளில் சொல்லப் பட்டவைகளை அப்படியே கடைப் பிடித்த உத்தமர், ஞானப்பிரகாசர். தீட்சை செய்து வைத்து ஞானவழி காட்டும் குருநாதராக இருந்தவர், ஞானப்பிரகாசர். திருவாரூர்த்தியாகேசர் கோயிலில் கட்டளைக் காரியங்களை விசாரித்து, ஏதேனும் பிரச்னை வந்தால் அதைச் சரி செய்து வைக்கும் அளவிற்கு உயர்ந்தவர், ஞானப்பிரகாசர். அப்படிப்பட்ட ஞானப்பிரகாசர், திருவாரூர் கோயிலில் விழா நடந்தபோது, அடியார்கள் சூழச் சென்றார். அப்போது ஆரூர் தியாகேசர் திருவீதி உலா வந்து கொண்டிருந்தார்; திருக்கூத்தாட்டம் நடந்தது. அந்த நிலையில் யாரும் எதிர்பாராதவாறு, தியாகேசர் பல்லாக்கின் தண்டு முறிந்து விழத் தொடங்கியது. அதைப் பார்த்த ஞானப்பிரகாசர்…

“அண்ட முழுதும் ஆழ்ந்து போகாமல் என்றும்போல்
பண்டை நிலை நிறுத்தும் பாதனே – துண்டாய்
அசையா நிருத்தம் அசையும் படி தண்டு
இசையும் வகையருள்வாய் இன்று”

– என்னும் வெண்பாவைப் பாடினார்.
அப்போதே அனைவரும் ஆச்சரியப்படும்படியாக, முறிந்த தண்டு நேராகியது. திருவிழா நல்லமுறையில் நிறைவேறியது. ஞானப்பிரகாசரின் புகழ் எங்கும் பரவியது.

அந்தக் காலத்தில் வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டில் வேதியர் ஒருவர் இருந்தார்; காசு – பணம், செல்வ வசதிக்குக் குறைவேயில்லை. பெரும் பணக்காரராக இருந்தார்.

செல்வம் இருந்து என்ன செய்ய? வேண்டியதைக் கொடுக்கும் செல்வம், ஆரோக்கியத்தைக் கொடுக்காது; கொடுக்க முடியாது. வேதியரைக் குட்ட, நோய் பிடித்துப் பாடாய்ப் படுத்தியது. துயரத்தில் துடித்தார் அவர். நாளாகநாளாகக் குட்ட நோய், அதிகமாக ஆனதே தவிரக் குறைவதாக இல்லை. வேதியரின் துயரைக் கண்ட பெரியவர் ஒருவர், ‘‘கவலைப் படாதே! திருவாரூர் சென்று ஞானப்பிரகாசரைக் கண்டு, அவர் அருளைப்பெற்றால் நோய் தீர்ந்து நலம் பெறலாம்.

‘‘அவர் எப்படிப்பட்ட கொடிய நோய் களையும் தீர்க்கக் கூடியவர். பிறவிப் பிணியையே போக்கக்கூடிய அவருக்கு இந்த நோயைப் போக்குவது ஒரு பெரிய காரியம் இல்லை.’’

‘‘ஆகையால் நீ, உடனடியாகத் திருவாரூர் சென்று அந்த ஞானப்பிரகாசரிடம் உன் குறையைச் சொல்! எல்லாம் சரியாகிவிடும்!’’ என்று சொல்லி வழி காட்டினார். வழியறிந்த வேதியர் உடனே திருவாரூர் சென்று, ஞானப் பிரகாசரிடம் தன் குறையைச் சொல்லி வேண்டினார். ஞானப்பிரகாசருக்கு மனம் இரங்கியது. அவர் உடனே தியாகேசரை வேண்டி.

“வேத வன மறையோன் மெய்யுறு தீக் குட்டமதின்
வாதனையை நீக்கி மகிழுறவே – ஏதமிலாசச்
செய்ய சடையானே! சிவபெருமானே! எவர்க்கும்
ஐயமிலாது இப்போது அருள்’’

– என்ற வெண்பாவைப் பாடினார்.

வேதியரின் நோய் சிறிதுசிறிதாகக் குறையத் தொடங்கியது; சில நாட்களில் முழுதும் குணமாகியது. அதன்பின் ஞானப்பிரகாசர் அந்த வேதியரிடம், ‘‘நீ மறைக்காடு சென்று இறைவனை வழிபட்டு இரு!’’ என்று சொல்லி வழி அனுப்பி வைத்தார். யார் – எதற்காக வரப்போகிறார்கள் என்ற ஞான திருஷ்டியும் ஞானப்பிரகாசருக்கு உண்டு. வல்லம் என்ற ஊரில் அழகன் என்ற வியாபாரி மிகுந்த செல்வ வசதி படைத்தவராக இருந்தார். கல்வி – கேள்விகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக இருந்த அவருக்குப் புறப் பற்றுக்கள் எல்லாம் நீங்கிய பின்னும், மெய்யறிவு – அதாவது தெளிவு உண்டாகவில்லை. அந்த வியாபாரி, ஞானப்பிரகாசரின் மேன்மைகளைக் கேள்விப்பட்டு, ‘‘திருவாரூர் போய் அவரிடம் நம் குறையைச் சொல்ல வேண்டும்’’ என நினைத்துத் திருவாரூரை நோக்கிப் புறப்பட்டார். அவர் புறப்பட்ட சற்று நேரத்தில், திருவாரூரில் ஞானப்பிரகாசர் திடீரென்று உட்கார்ந்து, ‘அத்துவித சாரம்’ என்னும் ஓர் அரிய நூலை, ஒரே மூச்சாக எழுதி முடித்தார்.

எழுதி முடித்ததும் தம் மாணவர்களிடம் அந்த நூலைக் கொடுத்த ஞானப்பிரகாசர், ‘‘அழகன் என்பவர் இங்கு வருவார். அவரிடம் இந்த நூலைக் கொடுங்கள்!’’ என்று கட்டளையிட்டார். அதன்படியே அழகன் வந்ததும் நூலைக் கொடுத்தார்கள். ஒன்றும் புரியாத நிலையில் அந்த நூலை வாங்கிய அழகன், முழுவதுமாகப் படித்துப்பார்த்தார்.

அவ்வளவில் அவர் மனத்தில் இருந்த சந்தேகங்கள் எல்லாம் விலகித் தெளிவு உண்டாகியது; வியப்படைந்தார். உடனே ஞானப்பிரகாசரின் அனுமதி பெற்று அவரைத் தரிசித்த அழகன், ‘‘சுவாமி! அடியேனுக்கு உபதேசம் செய்து அருள வேண்டும்!’’ என வேண்டினார். அவருடைய பரிபக்குவ நிலையைக்கண்ட ஞானப்பிரகாசர், அவருக்கு உபதேசம் செய்து அருள் புரிந்தார். அருள் உபதேசம் பெற்ற அழகன், குருநாதரை வணங்கித் தன் ஊருக்குத் திரும்பினார்.

இப்படிஅவரவர் வந்து ஞானப்பிரகாசரைத் தரிசித்துப் பலன் பெற்றது மட்டுமல்ல! மதுரையில் எழுந்தருளி இருக்கும் ஆலவாய் அழகரான சோமசுந்தரச் சிவபெருமானே, அடியார் ஒருவரை ஞானப்பிரகாசரிடம் அனுப்பிய அற்புதத்தகவல் உண்டு. வில்லிப்புத்தூரில் குருபாலன் எனும் வியாபாரிக்குத் தனபதி எனும் மகன் இருந்தான். பதினாறு வயதான தனபதி, நல்ல குருநாதர் ஒருவரைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன், மதுரைக்கு வந்தான்; ஆலவாய் அழகரான சொக்கநாதப் பெருமான் சந்நதியில் நின்று, தன் குறையைச் சொல்லி முறையிட்டான். அன்றிரவு தனபதி உறங்கும் போது, அவன் கனவில் சொக்கேசர் காட்சி கொடுத்தார்;

‘‘பக்தனே! நம் ஞானப் பரம்பரையில் வந்த ஒருவன், ஞானப்பிரகாசன் எனும் பெயருடன் திருவாரூரில் இருக்கிறான். நீ அவனிடம் சென்று அருள் உபதேசம் பெறுவாயாக!’’ என்று சொல்லி மறைந்தார். அதே சமயம், ஞானப்பிரகாசர் கனவிலும் காட்சி கொடுத்த சொக்கநாதர்,‘‘அன்பனே! மதுரையில் இருந்து தனபதி என்று ஓர் அடியவன் நாளைக்கு வருவான். அவனுக்குத் தீட்சை செய்து மந்திர உபதேசம் செய்வாயாக!’’ என்று சொல்லி மறைந்தார். ஞானப்பிரகாசரும் இறைவன் திருவருளை எண்ணி, மகிழ்ச்சியோடு இருந்தார். மறுநாள், தனபதி திருவாரூர் வந்து ஞானப்பிரகாசரைத் தரிசித்துப் போற்றி வணங்கினான். அப்போது அவனை அறியாமலேயே ஒரு பாடல் வெளிப்பட்டது.

“கண்டேன் இப்பாசம் கழிந்தேன் அமுதம் உகந்து
உண்டேன் சிவானந்தத்துள் இருந்தேன் – வண்டிமிர்காத்
தேனைப் பொழி கமலைச் செங்கமலப் பொற்பாதன்
ஞானப்ரகாசனையே நான்’’

பாடிப்பணிந்த தனபதியைப் பார்த்த ஞானப்பிரகாசர், அவன் நிலையை இன்னும் ஆராய்ந்து பார்க்க எண்ணினார்;
‘‘தனபதி! நீ இங்கேயே இரு!’’ என்றார். அதன்பின் தன் காரியங்களை முடித்துக் கொண்ட ஞானப்பிரகாசர், சீடர்களுடன் திருக்கோயிலுக்குச் சென்றார்; வழி பாட்டை முடித்துக் கொண்டு திரும்பிய ஞானப்பிரகாசர், தம் வீட்டிற்குள் நுழையும் முன், தம் சீடர்களைப் பார்த்து, ‘‘நில்லுங்கள்!’’ என்று கட்டளையிட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றார். சீடர்கள் அனைவரும், ‘‘குருநாதர் உத்தரவு கொடுத்துவிட்டார்’’ என்று எண்ணித்திரும்பிவிட்டார்கள்.

ஆனால், தனபதி மட்டும் திரும்பவில்லை; ‘‘குருநாதரின் உத்தரவை மீற மாட்டேன்’’ என்று அங்கேயே, குருநாதரின் வீட்டு வாசலிலேயே நின்றுவிட்டான். அன்றிரவு பெரும்மழை பெய்தது. அந்த மழையின் ஒரு சிறு துளிகூடத் தனபதி மீது விழவில்லை. தனபதியைச் சுற்றிப் பெய்து ஓடிக் கொண்டிருந்தது. மறுநாள் காலையில், வழக்கப்படிச் சீடர்கள் குருவைத் தரிசிக்க வந்தார்கள். வந்தவர்கள் தனபதியின் நிலைகண்டு வியந்தார்கள்; உடனே உள்ளே போய்க் குருநாதரிடம் தகவலைச் சொன்னார்கள். ஞானப்பிரகாசர் புரிந்து கொண்டார்; ‘‘தனபதி பக்குவசாலிதான். அவனுக்கு உபதேசம் செய்யலாம்’’ என்று தீர்மானித்து, தனபதிக்கு ‘சட்சு தீட்சை’ எனும் நயன தீட்சை அளித்தார்; ‘ஞான சம்பந்தர்’ எனத் தீட்சா நாமமும் சூட்டினார். (இந்த ஞானசம்பந்தர் வரலாறு தனி).

அதன்பின் திருவாரூரை விட்டுப் புறப்பட்ட ஞானப்பிரகாசர், பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு மதுரையை அடைந்தார். அங்கே பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி, அங்கயற்கண் அம்மை உடனுறை சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டார் ஞானப்பிரகாசர். அதன்பின் சிலநாட்கள் அங்கேயே தங்கியிருந்தார். அப்போது, சொக்கலிங்கப் பெருமானைப் பூசித்துக் கொண்டிருந்த வேதியர் ஒருவருக்குப் பழவினை காரணமாக, இரண்டு கண்களும் பார்வையை இழந்தன. ஞானப்பிரகாசரின் சக்தியைக் கேள்விப்பட்டு அறிந்த அந்த வேதியர், ஞானப்பிரகாசரைச் சந்தித்துத் தன் குறை தீர்க்க வேண்டினார்.

அருள் உள்ளம் கொண்ட ஞானப்பிரகாசர், மதுரை சொக்கேசரை வேண்டினார். ‘வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ!’ என்று திருமுறைகள் பாடித் துதித்தது உண்மையானது. ஞானப்பிரகாசரின் அருள் வேண்டலால் வேதியருக்கு இரு கண்களிலும் பார்வை திரும்பியது. விவரமறிந்து அனைவரும் ஞானப்பிரகாசரைப் பாராட்டினார்கள். ஆனால் அவரோ, ‘‘எல்லாம் அந்தச் சிவபெருமான் அருள்!’’ என்று சொல்லிவிட்டு, மதுரையை விட்டுப் புறப்பட்டார்; புறப்பட்டவர் திருக்கானப்பேர் எனும் காளையார் கோயிலை நோக்கிச் சென்றார். அந்தக் காலத்தில் காளையார் கோயிலில் சமணர்கள் அதிகமாக இருந்து, ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த சிவனடியார்கள், தங்கள் ஊருக்கு வருகை புரியும் ஞானப்பிரகாசரைச் சிறப்பாக வரவேற்க ஏற்பாடுகளைச் செய்தார்கள். ஆனால், அதிக அளவில் இருந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சமணர்கள் அதைத் தடுத்தார்கள்.‘‘பல்லக்கில் வரும் பிரகாசரை இந்த ஊருக்குள் நுழைய விட மாட்டோம். பிரகாசர் உண்மையிலேயே மகானாக இருந்தால், அவர் கும்பிடும் சிவபெருமான் உண்மையான கடவுளாக இருந்தால், இப்போது இந்த ஊரில் மழை பெய்யும்படியாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இவரை உண்மையான மகானாக ஏற்றுக் கொள்வோம். பிரகாசர் ஊருக்குள் வரலாம். இல்லாவிட்டால், பிரகாசரின் பல்லாக்கை ஊருக்குள் நுழைய விட மாட்டோம்!’’ என்று முழங்கினார்கள்.

காளையார் கோயில் மக்கள், ‘‘என்ன ஆகுமோ?’’ என்று பயந்தார்கள். சீடர்கள் போய் ஞானப்பிரகாசரிடம் நடந்ததைச் சொன்னார்கள். ஞானப்பிரகாசர் காளையார் கோயிலில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானைத் தியானித்துத் துதித்தார். ஊர் மக்கள் மனம் மகிழும்படியாக, அப்போதே பெருமழை பெய்யத் தொடங்கியது.அந்தப் பகுதியில் மழைபெய்து நீண்ட நாட்களாகி இருந்ததால், மழை கொட்டியவுடன் அனைவரும் மகிழ்ந்தார்கள். மிகுந்த நன்மை உண்டானது. சிவனடியார்களுடன் சேர்ந்து சமணர்களும் ஞானப்பிரகாசரின் பெருமையையும் தவ ஆற்றலையும் உணர்ந்தார்கள் பிறகென்ன? அனைவருமாகச் சேர்ந்து ஞானப்பிரகாசரைப் போற்றித் துதித்து, மிகுந்த சிறப்போடு ஊருக்குள் அழைத்துச் சென்றார்கள்.

ஞானப்பிரகாசர், காளையார்கோயில் ஈசரைத் தரிசித்துத் துதித்து வணங்கினார். ஆலயத்தில் நின்றுபோன பூஜை முதலியவற்றைக் குறைவில்லாமல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அங்கிருந்து புறப்பட்ட ஞானப்பிரகாசர், பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு காசியை அடைந்தார்; அங்கேயே சில நாட்கள் தங்கினார். கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரையும் அன்னை விசாலாட்சி அம்மையையும் தரிசிப்பதுமாக நாட்களை நடத்திக் கொண்டிருந்தார் ஞானப்பிரகாசர். அவ்வாறு ஞானப்பிரகாசர் காசியில் இருந்த காலத்தில், அவ்வூர் அரசன் காசிராஜன் மகனை, ஒருநாள் பாம்பு கடித்துவிட்டது. என்னென்னவோ முயற்சிகள் செய்தும் விஷம் இறங்கவில்லை.

‘‘என் மகனைக் காப்பாற்ற யாருமே இல்லையா?’’ எனக் கதறினார் மன்னர். மன்னரின் உறவினர்கள் அவரை நெருங்கினார்கள்; ‘‘மன்னா! கவலைப் படாதீர்கள்! தென்னாட்டில் இருந்து இங்கே காசிக்கு ‘ஞானப்பிரகாசர்’ என்ற மகான் வந்திருக்கிறார். அவரிடம் சென்று வேண்டுங்கள்! உங்கள் மகன் பிழைப்பான்’’ என்றார்கள். மன்னர், மகனைச் சுமந்து கொண்டு உடனே ஓடிப் போய், ஞானப்பிரகாசரின் திருவடி களில் விழுந்து, தன் மகனைக் காப்பாற்றும்படி வேண்டினார். மன்னரின் துயர்கண்டு மனம் இரங்கினார் ஞானப்பிரகாசர்; சிவபெருமானைத் தியானித்து, பாம்பு கடித்த சிறுவன் உடம்பில் விபூதியைச் சாற்றினார்.

அந்த அளவில் இளவரசன் உடம்பில் இருந்த நஞ்சு இறங்க, அவன் உயிர் பிழைத்தான். மன்னரின் மகிழ்ச்சி எல்லை மீறிப்போனது; ஞானப்பிரகாசரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். அதன் பிறகு மன்னரின் ஒப்புதலோடு காசியை விட்டுப் புறப்பட்ட ஞானப்பிரகாசர், தென்னாட்டை நோக்கித் திரும்பத் தொடங்கினார்.காஞ்சியை அடைந்த ஞானப்பிரகாசர், நாள்தோறும் சிவ தரிசனம் செய்து கொண்டு, காஞ்சியிலேயே ஒரு திருமடத்தில் தங்கியிருந்தார்.

அப்போது காஞ்சி அரசர், ஞானப்பிரகாசரின் தவ ஆற்றலை உணர்ந்து, அவர் திருவடிகளில் வந்து விழுந்தார்; ‘‘சுவாமி! அடியேன் துறவு கொள்வதில் பெரும்விருப்பம் கொண்டவன்; துறவு நிலை தந்தருளி, முக்தி எனும் வீடுபேற்றையும் தாங்கள் அருள வேண்டும்’’ என வேண்டினார். ‘‘மன்னா! இப்போதைய நிலையில், நீ துறவு பூண்டால், அரசன் இல்லாமல் நாடு பாழாகிவிடும்’’ என்று சொல்லி, மன்னரின் மனத்தை மாற்றி, நல்லவிதமாக ஆட்சிசெய்ய அருளாசிவழங்கிவிட்டு, சிவத்தலங்கள் பலவற்றையும் தரிசித்தவாறு திருவாரூரை அடைந்தார்; பழையபடி தவத்தைத் தொடர்ந்தார்.

ஞானப்பிரகாசர் எழுதிய நூல்கள் அனைத்தும் மிகவும் உயர்ந்தவை. அவற்றில் ‘புட்ப விதி’ எனும் நூல், மலர்களின் வகைகள், எந்தத் தெய்வத்திற்கு எந்த மலர் மலர்களைப் பறிக்க வேண்டிய பறிக்கக்கூடாத நாட்கள், மாவிளக்கு மாவு விவரங்கள் எனப் பல தகவல்களையும் அற்புதமாக விவரிக்கின்றது. ‘புட்ப விதி’ எனும் அந்த நூலிலிருந்து சில தகவல்கள்:

துளசியும் வில்வமும் எத்தனை
மாதங்களுக்கு ஆகும் எனும் பாடல்:

“கூறு நாளில் எடுத்திடு கூவளம்
ஆறு மாதம் வைத்து அர்ச்சனை செய்யலாம்
நாறும் வெள்ளை நிறத்த நறுந்துழாய்
ஏறும் அர்ச்சனை ஈராறு திங்களே’’

கருத்து: உரிய ஒரு நாளில் கொய்து வைத்த வில்வத்தை ஆறு மாதங்கள் வைத்துக் கொண்டு பூஜை செய்யலாம். வெள்ளைத் துளசியை, பறித்த நாள் முதல் ஓராண்டு வரை வைத்துப் பூஜை செய்யலாம். இந்த மலர், இந்தப் பாவத்தைத் தீர்க்கும் எனும் பாடல்கள்:

“எள்ளு நெடும் பிரம்மகத்தி தன்னை நீக்கும்;
இதழி தாயரைக் கொன்ற ஏதம் நீக்கும்;
வெள்ளெருக்குப் பரதார வினைதணிக்கும்;
வில்வமது பொய்யுரைத்த வெம்மை நீக்கும்;
கள்ளுணவு கோங்கம்பூப் புனைய நீக்கும்
கத்தரியின் இலை புனையக் குட்டம் நீக்கும்;
உள்ளிய தெல்லாம் எய்தும்; வறுமை நீக்கும்;
ஒண் துழாய்; மலர்களினும் உயர்ச்சி தானே!’’

கருத்து: எள்ளுப் பூ பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும், கொன்றை, தாயாரைக் கொன்ற பாவத்தைப் போக்கும், வெள்ளெருக்கு, மாற்றான் மனைவியை விரும்பிய பாவத்தைத் தீர்க்கும், வில்வம், பொய் சொன்ன பாவத்தைப் போக்கும், கோங்கம் பூ, கள்ளுண்ட பாவத்தை அகற்றும், கத்தரி இலை, குஷ்ட நோயை நீக்கும், துளசி, வறுமையைப் போக்கி, நினைத்த வைகளைக் கொடுக்கும், துளசி, மலர்களில் உயர்ந்தது.

“தும்பை மலர் கோஹத்தி தோடம்
நீக்கும்;
சொன்னம் நயந்திடு களவு பலாசு
நீக்கும்;
தம்பி தமையனைக் கோறல் அறுகு
நீக்கும்;
சாத்திடுஞ் சந்தனம் மகாதுக்கம் நீக்கும்;
அம்புவியில் இலிங்க பின்னம் அசோகு நீக்கும்;
அடைந்தோர் தம் வறுமையெல்லாம் ஆன்பால் நீக்கும்;
வம்பவிழ் நெய் நெல்லியிவை உரோகம் நீக்கும்;
வளர் நீலோற்பலம் நீக்கும் வாக்குத் தோடம்.’’

கருத்து: தும்பைப் பூ, கோஹத்தியை (பசுவைக்கொன்ற பாவத்தை) போக்கும், முருக்கம் பூ, தங்கத்தைத் திருடிய பாவம் நீக்கும், அறுகம்புல், உடன் பிறந்தவர்களைக் கொன்ற பாவத்தை ஓட்டும், சந்தன இலை சாற்றினால், பெரும் துன்பமும் நீங்கும், அசோகம் பூ, லிங்கத்தை உடைத்த பாவத்தை அகற்றும், நீலோற்பலப் பூ, சொல்லால் வந்த பாவங்களை நீக்கும், பால் அபிஷேகம், வறுமையை நீக்கும், நெய்க்காப்பும் நெல்லிக்காப்பும், நோய்களைத் தீர்க்கும்.

The post கமலை ஞானப்பிரகாசர் நூல் உருவான வரலாறு appeared first on Dinakaran.

Tags : Kamal Gnanprakasar ,Kamala Gnanaprakasar ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...