×

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது * திருடிய பணத்தில் கேரளாவுக்கு சுற்றுலா * விசாரணையில் பகீர் தகவல் அதிமுக பிரமுகர் வீட்டில் 35 சவரன் திருடிய சம்பவம்

திருவண்ணாமலை, மார்ச் 6: திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி வீட்டின் பூட்டு உடைத்து, 35 சவரன் நகை, ₹4 லட்சம் திருடிய 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதை குபேர நகரை சேர்ந்தவர் முருகன்(48). அதிமுக நகர பொருளாளர். மேலும், திருவண்ணாமலையில் திருமண மண்டபம் மற்றும் லாட்ஜ் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது மகளுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக, கடந்த 27ம் தேதி குடும்பத்தினருடன் விருதுநகருக்கு சென்றிருந்தார். பின்னர், கடந்த 28ம் தேதி இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவை, இரும்பு கம்பியால் நெம்பி உடைத்திருந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 35 சவரன் தங்க நகைகள், ₹4 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள், வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளுக்கான ஹார்டு டிஸ்கையும் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் மேலும், டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், எஸ்ஐ நஸ்ருதீன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த 4 பேர் கொண்ட கும்பலை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை வேங்கிக்கால் இந்திரா நகரை சேர்ந்த சிவா மகன் ரஞ்சித்(19), அவரது நண்பர் திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்த கவுரிசங்கர் மகன் ராம் (20) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டதும், இவர்களுக்கு உடந்தையாக ரஞ்சித்தின் தந்தை சிவா(45), தாய் அமுதா(38) ஆகியோர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

அதிமுக நிர்வாகி வீட்டில் திருடிய நகைகள் மற்றும் பணத்தை கொண்டு கோவை, கேரளா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றதும், அங்கிருந்து சென்னைக்கு வந்து பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், திருடிய 35 சவரன் நகையில் 15 சவரன் அடகு வைத்திருப்பதாக தெரிவித்தனர். எனவே, அவர்களிடமிருந்து 20 சவரன் நகை மீட்கப்பட்டது. மேலும் திருடிய பணத்தை சுற்றுலா சென்றபோது செலவழித்ததாக தெரிவித்துள்ளனர். எனவே, அவற்றையும் மீட்பதற்கான நடவடிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதோடு, ரஞ்சித் மற்றும் அவரது நண்பர் ராம் ஆகியோர் மீது ஏற்கனவே பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இவர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் உட்பட 4 பேர் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது * திருடிய பணத்தில் கேரளாவுக்கு சுற்றுலா * விசாரணையில் பகீர் தகவல் அதிமுக பிரமுகர் வீட்டில் 35 சவரன் திருடிய சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Bhagir ,AIADMK ,Tiruvannamalai ,Murugan ,Thiruvannamalai ,Krivalabathi ,Kubera Nagar ,Treasurer ,Bagheer ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...