முத்துப்பேட்டை, மார்ச் 6: தில்லைவிளாகம் ராமர்கோயில் அனுமார் குளத்தில் வடிகால் நீர் வடியாமல் நடவடிக்கை தேவை என்று ஒன்றிய கவுன்சிலர், ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார். முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகத்தில் உள்ள பிரசித்திபெற்ற வீரகோதண்ட ராமர் கோயில் உள்ளது. பிரபலமான இந்த கோயிலில் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அடிக்கடி ஆன்மீக பயணமாக வந்து செல்வதுண்டு. இந்த கோயிலில் தினந்தோறும் களைக்கட்டி காணப்படுவது வழக்கம்.
இந்த கோயில் அருகே உள்ள ராமர் குட்டை குளம் என்பது, ராமர் கோயிலின் பக்தர்களின் புண்ணிய தீர்த்த குளமாகவும் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் புதியதாக கட்டப்படும் வடிகால் இந்த குளத்தில் வடியும் வகையில் அப்பகுதி முக்கிய பகுதியிலிருந்து வரும் வடிகால் அமைந்துள்ளது. இதனால் இந்த வடிகால் மூலம் மழைநீர் மட்டுமல்லாது, கழிவு நீரும் வடிய வாய்ப்புகள் உள்ளதால் இதை தவிர்த்து அதே பகுதியில் உள்ள வாய்காலில் வடியும் வகையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றிய ஆணையர் ஆகியோரிடம் ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, முத்துப்பேட்டை ஒன்றியம் தில்லைவிளாகம் கோயிலடி பகுதியில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வடிகால் மூலம் வடியும் மழைநீர் மற்றும் கழிவுநீரானது வீரகோதண்ட ராமர் கோயிலின் அனுமர் குட்டை என்னும் புண்ணிய தீர்த்த குளத்தில் வடியும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுவது மட்டுமின்றி பெரும்பான்மை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் இறை நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் உள்ளது.
எனவே மேற்படி வடிகாலை அருகில் உள்ள வாய்க்கால் வரை பணியை நீட்டித்து பணி நடைபெற பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தில்லைவிளாகம் ராமர்கோயில் அனுமார் குளத்தில் வடிகால் நீர் வடியாமல் நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.