×

கோயில் பூட்டு உடைக்கப்பட்டு திறப்பு

மல்லசமுத்திரம், மார்ச் 5: மல்லசமுத்திரம் அருகே, கோணங்கிபாளையத்தில், 14 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கோயிலில், நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு கோயில் திறக்கப்பட்டது. பதற்றம் நிலவுவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மல்லசமுத்திரம் அருகே கீழ்முகம் கிராமம் கோணங்கிபாளையத்தில், சுமார் 200ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனாரப்பன், பெரியாண்டிச்சிஅம்மன் கோயில்கள் அமைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 350குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இந்த ேகாயில் பாத்தியப்பட்டது. இதில், சக்திவேல், பாலசுப்ரமணியம் என இருதரப்பினரிடையே நிர்வாக காரணங்களுக்காக கடந்த 14ஆண்டுகளாக கோயில் பூட்டப்பட்டு, விழா நடக்காமல் இருந்தது. இந்த கோயிலின் சாவி பாலசுப்ரமணியிடம் இருந்தது. சாவியை அவர் கொடுக்க மறுத்ததால், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. நோட்டீஸ் பெற்று கொள்ளாததால், வீட்டு முன்பு கதவில் நோட்டீஸ் ஓட்டப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,சுகந்தி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாலசுப்ரமணி தரப்பினருக்கு இதில் உடன்பாடு இல்லாததால் கோயில் சாவியை தரவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் இந்துஅறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, விஏஓ., ராஜா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று கோயில் பூட்டு உடைக்கப்பட்டு முப்பூஜை பெருவிழா நடந்தது. இன்று(5ம் தேதி) திருவிழா நடக்க உள்ளது. இதனால் பதட்டம் நிலவியதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல் இருக்க, எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மல்லதமுத்திரம் எஸ்ஐ ரஞ்சித்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்திருவிழாவில், பாலசுப்ரமணியன் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை.

The post கோயில் பூட்டு உடைக்கப்பட்டு திறப்பு appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Konangipalayam ,Kielmugam ,
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு