×

டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சேதமான வீடுகள் பழுது நீக்கம், கட்டுமானத்திற்கு ரூ.45.84 கோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக ரூ.45.84 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

அவ்வாறு மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2 லட்சம் வரையும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கிணங்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூ.24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ.45.84 கோடி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

The post டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சேதமான வீடுகள் பழுது நீக்கம், கட்டுமானத்திற்கு ரூ.45.84 கோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M K Stalin ,CHENNAI ,M. K. Stalin ,Municipal Administration and Drinking Water Supply Department ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...