×

சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குற்றச்சாட்டு; தமிழக அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடி கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சென்னை – தடா, கோயம்பேடு – மதுரவாயல் உள்பட 3 பகுதிகளில் 40 சட்டவிரோத கொடிகம்பங்கள் உள்ளன. மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை இடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 சட்டவிரோத கொடிக்கம்பங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 சட்டவிரோத கொடி கம்பங்களும் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, கொடிகம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோதமாக அரசியல் கட்சிகள் அமைத்துள்ள கொடி கம்பங்களை அகற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றார். இதையடுத்து, தமிழக தலைமைச் செயலாளரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற ஒத்துழைப்பு அளிப்பதில்லையா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், சட்டவிரோத கொடி கம்பங்களை அகற்றும்படி உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவற்றை அகற்றாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

The post சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குற்றச்சாட்டு; தமிழக அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : National Highways Commission ,Tamil Nadu government ,Eicourt ,Chennai ,Chennai, Ramalingam ,Chennai High Court ,Tamil Nadu ,Thada ,Coimbedu ,Madurawal ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...