×

திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் அரசின் பயிற்சி பள்ளியில் தேர்வானவர் அல்ல: தமிழக அரசு விளக்கம்

சென்னை: திருவேற்காடு கோயிலில் அம்மன் செயினை திருடியவர் அரசின் பயிற்சி பள்ளியில் தேர்வானவர் அல்ல என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி செயினை காணவில்லை என கடந்த பிப்.5ம் தேதி அர்ச்சகர்கள் கோயில் பொறுப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோயில் அதிகாரிகள் விசாரித்த போது, செயினை தற்காலிக அர்ச்சகர் சண்முகம் (எ) பாபு திருடி அடகு வைத்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசில் புகார் அளிப்பதாக கூறிதையடுத்து அடகு வைத்த நகையை மீட்டு திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயினை திருடியதாக அர்ச்சகர் சண்முகம் மீது திருவேற்காடு போலீசில் கோயில் பொறுப்பாளர் கனகசபரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து அர்ச்ச்கர் சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் செயினை திருடிய அர்ச்சகர் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வானவர் என்று விஷமிகள் பொய்யான தகவலை பரப்பி வந்தனர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கருமாரியம்மன் கோயில் நகையைத் திருடிய தற்காலிக அர்ச்சகர், தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பது முற்றிலும் பொய்யானது. இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகராக பணியாற்றி வந்தவர், சண்முகம். தனது தந்தை சுப்பிரமணியன் ஐயரிடம் ஆகமப் பயிற்சி பெற்று அதன் அடிப்படையிலேயே பூஜை செய்யும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் 57 கிராம் தங்க செயினுடன் கூடிய அம்மனின் திருமாங்கல்யத்தைத் திருடி அடகு வைத்துள்ளார். திருமாங்கல்யம் மீட்கப்பட்டு மீண்டும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம். உயர்நீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முற்போக்கான திட்டம் என பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது போன்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் அரசின் பயிற்சி பள்ளியில் தேர்வானவர் அல்ல: தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvekadu temple ,Tamil Nadu government ,CHENNAI ,Thiruvekadu ,temple ,Devi Karumariamman temple ,Tiruvekadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...