×

தமிழை வழக்காடு மொழியாக்க முயற்சி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுகவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்மொழியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து முதல்வர், ஒன்றிய அரசுக்குக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையிலேயே தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த நேரத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கிட வேண்டும் என்ற தீர்மானத்தை 2006 டிச.6ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியது. தொடர்ந்து, ஆளுநரின் பரிந்துரையுடன் இத்தீர்மானம் 2007ம் ஆண்டு பிப்.11ம் தேதி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், இதுகாறும், ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கிடும் தீர்மானத்தை, ஒன்றிய அரசு உடனடியாக ஏற்று ஆணை பிறப்பிக்க கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் என வாக்குறுதி அளித்திருப்பதோடு, தொடர்ந்து முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.எனவே, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் தங்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தை கைவிடக் கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

The post தமிழை வழக்காடு மொழியாக்க முயற்சி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : RS Bharati ,Chennai ,Chennai High Court ,DMK ,RS Bharti ,
× RELATED மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை...