×

எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்: கோரமண்டல் தொழிற்சாலை அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தல்

சென்னை: எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரத்தில், தமிழக அரசின் அறிவுறுத்தல்களை ஏன் பின்பற்ற முடியாது என விளக்கத்தை அரசுக்கு அளித்து அதற்கு ஏற்ற யோசனைகளை பெற வேண்டும் என கோரமண்டல் தொழிற்சாலைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தி உள்ளது.

எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வாயு கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணை நடத்தினர். ஏற்கனவே பலமுறை விசாரணை நடந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசரணைக்கு வந்தது.

முதலில் பேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழக்கறிஞர், அரசு சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர் தொழிற்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்டதிற்கு இழப்பீடு தர வேண்டும், சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் தொழிற்சாலை எதிர்கொள்ள வேண்டும் என்ற 3 முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு அறிவுறுத்தல்களை தொழிற்சாலைக்கு அரசு சார்பில் வழங்கி உள்ளது. இந்த வல்லுநர்கள் குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பல்வேறு வகையான தகவல்களை சேகரித்து பிறகு தான் இந்த அறிவுறுத்தல்களை வகுத்துள்ளது. அதை தொழிற்சாலை பின்பற்றினால் தொழிற்சாலை திறக்க அரசு அனுமதி அளிக்கும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய கோரமண்டல் தொழிற்சாலை தரப்பு, அரசு அளித்த அறிவுறுத்தல்களை நாங்கள் பின்பற்ற தயார். ஆனால் அதில் சில அறிவுறுத்தல்கள் பின்பற்றுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. அதுமட்டுமின்றி சில தகவல்களும் அதில் தவறாக உள்ளது. எனவே நாங்கள் ஒரு வல்லுநர்கள் குழுவை அமைத்து அரசு அமைத்த வல்லுநர்கள் குழுவுடன் சேர்ந்து மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். தற்போது பாதிக்கப்பட்ட குழாய் அருகில் மக்கள் போராட்டம் நடைபெறுவதால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அரசு வல்லுநர்கள் குழுவுடன் எங்கள் குழு ஆய்வு செய்த பிறகுதான் ஒரு முடிவு வரும். தற்போது வரை இந்த சம்பவத்திற்கு எங்களுடைய தவறு எதுவும் இல்லை, இது கடவுளின் செயல் (act of god) என தெரிவித்தனர்.

மேலும் பேசிய அரசு வழக்கறிஞர், இந்த சம்பவத்திற்கு முழு காரணம் அந்த தொழிற்சாலை தான். கடவுளின் செயல் (act of god) என்று எவ்வாறு கூறமுடியும். மேலும் தொழிற்சாலை சார்பில் அவர்கள் அமைத்த வல்லுநர்கள் குழு மீண்டும் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். அப்படி செய்தால் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவை அவமதிக்கும் செயல் ஆகும் என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதத்தை கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்கள், தமிழக அரசு அமைத்த வல்லுநர்கள் குழு அளித்த அறிவுறுத்தல்களில் எது பின்பற்ற முடியாது, ஏன் பின்பற்ற முடியாது என உரிய விளக்கத்துடன் அரசுக்கு தொழிற்சாலை அனுப்ப வேண்டும். அதற்கு ஏற்ற யோசனைகளை அரசு சார்பில் தொழிற்சாலைக்கு வழங்க வேண்டும் என தெரிவித்து தேதி தெரிவிக்காமல் வழக்கை ஒத்தி வைத்தனர்.

The post எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்: கோரமண்டல் தொழிற்சாலை அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : National Green Tribunal ,CHENNAI ,Coromandel factory ,Tamil Nadu government ,Ennore ,Ennore… ,Coromandel ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...