×

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மேலும் 32 ரயில்கள் வாங்க டெண்டர்: அதிகாரிகள் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மேலும் 32 ரயில்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீட்டரில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3வது வழித்தடம், கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

இந்த திட்டத்திற்காக டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகள் கொண்ட 36 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்வதற்காக அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துடன் ரூ.1215.92 கோடி மதிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மீண்டும் 32 மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்களை தயாரிப்பதற்காக டெண்டர் கோரியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம் முதலில் மூலதன செலவை குறைக்க சில ரயில்களை குத்தகை முறையில் எடுத்து பயன்படுத்த திட்டமிட்டது, ஆனால் பின்னர் திட்டம் மாற்றப்பட்டது. தற்போது ரயில்களை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ரயில்கள் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்து ஒரு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு கிட்டத்தட்ட 5, 6 மாதங்கள் ஆகும். அதன் பிறகு உற்பத்தி தொடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் ரயில்களை வழங்குவதற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் அவகாசம் பெறும். இம்முறை, ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம், 15 ஆண்டுகளுக்கு விரிவான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பிற்காலத்தில் உதிரிபாகங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கான செலவைச் சேமிக்க நாங்கள் இதை செய்கிறோம்.

தற்போது நகரில் 54 கிமீ முதல்கட்ட திட்டத்தில் இயங்கும் ரயில்களில் நான்கு பெட்டிகள் இருந்தாலும், இரண்டாம் கட்ட திட்டத்தில், மூன்று பெட்டிகள் மற்றும் ஆறு பெட்டிகள் கொண்ட இரண்டு வகையான டிரைவர் இல்லாத ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் வரும் காலங்களில் தயாரிக்கப்படும், தேவை அதிகரித்தால், இரண்டு மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்கள் இணைக்கப்பட்டு ஆறு பெட்டிகளாக இயக்கப்படும். இந்த ரயில்கள் சராசரியாக மணிக்கு 32 கிமீ வேகத்தில் பயணிக்கும். இரண்டாம் கட்ட திட்டமும் முழுமையாக செயல்பட்டதும், இந்த ரயில்கள் ஆண்டுக்கு சராசரியாக 1,50,000 கி.மீ. வரை ஓடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மெட்ரோ வழித்தடம் 5ல் மின்-இயந்திரம் அமைக்கும் பணிக்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 5ல் கோயம்பேடு சந்தை முதல் எல்காட் பூங்கா மெட்ரோ வரை 22 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.137.86 கோடியில் யூனிவர்சல் மேப் பிராஜெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, யூனிவர்சல் மேப் பிராஜெட் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுத் தலைவர் ஜெயந்த் தேஷ்பாண்டே மற்றும் தென் மண்டலத் தலைவர் பிப்லாப் சட்டோபாத்யாய் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர்கள் ராமசுப்பு, நடராஜன், கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் யூனிவர்சல் மேப் பிராஜெட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

தாம்பரம் முதல் சின்னமலை வரை போக்குவரத்து அமைப்பை செயல்படுத்த மறுமதிப்பீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரை மற்றும் வேளச்சேரியில் இருந்து கிண்டி அல்லது சின்னமலை வரை நீட்டிக்கப்படும் விரைவான போக்குவரத்து அமைப்பை செயல்படுத்துவதற்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு ஆய்வின் மறுமதிப்பீட்டிற்கான ஆலோசனை வழங்குதல் மற்றும் தற்போதுள்ள விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஸ்சஸ்ட்ரா மேவ் (SYSTRA MVA) கன்சல்டிங் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரை மற்றும் வேளச்சேரியில் இருந்து கிண்டி அல்லது சின்னமலை வரை 26 கி.மீ. நீளத்திற்கு நீட்டிக்கப்படும் விரைவான போக்குவரத்து அமைப்பின் சாத்தியக்கூறுகளுக்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு அறிக்கையை தயாரிப்பது இப்பணியின் நோக்கம். தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின்படி, வழித்தடமானது வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் நிலையம் வரை மட்டுமே முன்மொழியப்பட்டது மற்றும் வேளச்சேரியின் முக்கிய வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் வழியாக தற்போதுள்ள மெட்ரோ நிலையங்களை இணைப்பதை கருத்தில் கொள்ளவில்லை. எனவே, போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு ஆய்வின் மறுமதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் ஸ்சஸ்ட்ரா மேவ் (SYSTRA MVA) கன்சல்டிங் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தீப் புல்லர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியாசர், அசோக் குமார், பொது மேலாளர் ஜெபசெல்வின் கிளாட்சன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மேலும் 32 ரயில்கள் வாங்க டெண்டர்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...