×

ரூ.20 கோடி வழங்காவிட்டால் பெங்களூருவில் குண்டு வெடிக்கும்: முதல்வர், துணை முதல்வருக்கு இ-மெயில் மிரட்டல்

பெங்களூரு: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் பெங்களூரு மாநகரம் மீளாத நிலையில், அதற்குள்ளாக பெங்களூருவின் 3 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு மிரட்டல் இமெயில் வந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இமெயிலில், நீங்கள் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டீர்கள். ₹20 கோடி கொடுக்காவிட்டால், பேருந்துகள், ரயில்கள், டாக்சிக்கள், கோயில்கள், ஓட்டல்கள், பொது இடங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுகள் வெடிக்கும். நாங்கள் மற்றுமொரு டிரெய்லரை காட்ட வேண்டிவரும். மற்றொரு வெடிகுண்டு அம்பாரி உத்சவ் பேருந்தில் வெடிக்கும். பேருந்தில் குண்டு வெடித்த பின், உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த மெயிலை சமூக வலைதளங்களில் மக்கள் அனைவரும் பார்க்கும்படி பகிர்வோம். அடுத்த குண்டுவெடிப்பு தொடர்பான எச்சரிக்கை டிவிட் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மிரட்டல் மெயில் குறித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எனக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு இமெயில் வந்தது. அது எனது செல்போனில் உள்ளது. அதை நான் விசாரணைக்காக போலீசாருக்கு அனுப்பியிருக்கிறேன். அதே மெயிலில் மீண்டும் தொடர்புகொள்வதற்கான வேறு மெயில் ஐடியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதையும் போலீசாரிடம் கொடுத்திருக்கிறேன். இது போலியான வெற்று மிரட்டலா அல்லது உண்மையா என்று தெரியவில்லை. அந்த மெயில் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. போலீசார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

The post ரூ.20 கோடி வழங்காவிட்டால் பெங்களூருவில் குண்டு வெடிக்கும்: முதல்வர், துணை முதல்வருக்கு இ-மெயில் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Chief Minister ,Deputy Chief Minister ,Rameswaram ,Siddaramaiah ,D.K.Sivakumar ,
× RELATED தென்னிந்தியாவை பாஜக அரசு...