×

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்: கீழ்ச்சிறுனை மாணவர்கள், கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: கீழ்ச்சிறுனை கிராமத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட டவுன் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பள்ளி மாணவ – மாணவிகள் பெற்றோருடன் காஞ்சிபுரத்திற்கு வந்து கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கீழ்ச்சிறுனை கிராமத்தில் 2000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் பிள்ளைகள் அருகிலுள்ள தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இக்கிராமத்தில், 1 முதல் 5ம் வகுப்பு வரை மட்டும் உள்ளதால், 6 முதல் 12ம் வகுப்பு வரை படிப்பதற்காக அருகிலுள்ள பாலுசெட்டிசத்திரம் கிராமத்திற்கு செல்ல வேண்டும். அந்த வகையில், பள்ளி மாணவ – மாணவிகள் மட்டுமல்ல கிராமத்தில் உள்ள பொதுமக்கள் காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்றுவர நகர பேருந்து தடம் எண் 7 மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இப்பேருந்துகள் அனைத்தும் கடந்த கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டதால், கீழ்ச்சிறுனை கிராமமக்கள், பள்ளி செல்லும் மாணவ – மாணவிகள் போதிய போக்குவரத்து வசதி இன்றி நடந்து சென்றும், சைக்கிளில் சென்றும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், கீழ்ச்சிறுனை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ – மாணவிகள், பெற்றோர்கள் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கீழ்ச்சிறுனை கிராமத்தில் இருந்து தைப்பாக்கம் வழியாக செல்லக்கூடிய நகர பேருந்து தடம் எண் 7 மற்றும் மினி பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

The post கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்: கீழ்ச்சிறுனை மாணவர்கள், கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kalachelvi Mohan ,Kilchirunai ,
× RELATED காஞ்சிபுரத்தில் தொழில், வர்த்தக...