காஞ்சிபுரம்: குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் எச்சரித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் குழந்தை கடத்தல் நடைபெறுவதாக வதந்திகள் பரவி வருகிறது. இவ்வாறாக குழந்தை கடத்தல் குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானது.
பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. குழந்தைகளை கடத்துவதாக வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. எனவே, பொய்யான செய்திகளை யாரும் பகிர வேண்டாம். அவ்வாறு பகிர்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக அவசர உதவி எண் 100 அல்லது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 044-2723 6111 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: காஞ்சி எஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.