×

சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்புகளால் சிதைந்து கிடக்கும் சிறுகுளம் கண்மாய்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டிக் கிடக்கும் சிறுகுளம் கண்மாயை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நீர்நிலையை சீரமைத்து படகு சவாரி விட்டு வருவாயை பெருக்கலாம் என தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மெயின்ரோட்டில் சீலையம்பட்டி, கோட்டூர் என இரண்டு கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுமார் 20,000 பேர் வசிக்கின்றனர். முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் இரண்டு போக நெல் சாகுபடி நடக்கிறது. மேலும், கண்மாய், குளங்கள் பாசனம் மூலம் தென்னை, வாழை, காய்கறிகள், பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், சீலையம்படி மற்றும் கோட்டூர் இடையே 141 ஏக்கர் பரப்பளவில் சிறுகுளம் என்னும் மெகா கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் பெரியாற்று தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். இந்த சிறுகுளம் கண்மாய் 1,814 மீட்டர் சுற்றளவு கொண்டது; நூறு மில்லியன் கனஅடி நீர் தேக்கலாம். சீலையம்பட்டி, கோட்டூர், பூலானந்தபுரம், தர்மபுரியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த கண்மாய் விளங்குகிறது. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி நடக்கிறது. 250 ஏக்கர் ஆயக்கட்டுக்கும் பாசன பற்றாக்குறை இல்லாமல் காத்து வருகிறது.

40 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை

இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகுளம் கண்மாய் பராமரிக்கப்படாததால், தடுப்புச் சுவர்களும், மதகுகளும் பழுதாகி கிடக்கின்றன. குளத்தின் பெரும்பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து புதராக மண்டியுள்ளது. இதனால், குளத்தில் ஒரு சிறுபகுதி மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த 2015ம் ஆண்டு 12 குளங்களுக்கு ரூ.6 கோடி செலவில் மதகுகள், கரைகளையும் பலப்படுத்தி தூர்வாரி கருவேல மரங்கள் அகற்றி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், 60 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிறுகுளத்தை முற்றிலும் சீரமைக்க ஏலம் எடுத்த ஏலதாரார், கருவேல மரங்களை வெட்டி அகற்றி, கடத்தி காளவாசல்களுக்கு விற்பனை செய்துவிட்டு, தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்போதைய அதிமுக ஆட்சியும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

60 ஏக்கருக்கும் மேலாக ஆக்கிரமிப்பு

141 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில் 60 ஏக்கருக்கும் மேலாக ஆக்கிரமித்து தென்னந்தோப்புகளாகவும், வயல்வெளிகளாகவும் மாற்றியுள்ளனர். எனவே, சிறுகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும். மேலும், வருவாயைப் பெருக்கும் விதத்தில் படகு சவாரி திட்டத்தை கொண்டு வரலாம். இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கும், கிராம மக்களுக்கும் பொழுது போக்கு இடமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சீலையம்பட்டி விவசாயியும், தேனி ஒன்றிய குழு முன்னாள் தலைவருமான மலைராஜா கூறுகையில், ‘சீலையம்பட்டி கோட்டூருக்கு இடையே சிறுகுளம் கண்மாயில் தண்ணீர் தேக்கப்படுகிறது. 60 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. முட்புதர்கள் வளர்ந்து கண்மாயை மூடியுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்நிலையை தூர்வார வேண்டும். முழு கொள்ளளவு தேக்கி படகு சவாரி விடலாம்’ என்றார். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது: குளத்திற்கு சிறப்பு பராமரிப்பு திட்டம் கேட்டு அரசிடம் அறிக்கை அளித்துள்ளோம். உத்தரவு வந்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்புகளால் சிதைந்து கிடக்கும் சிறுகுளம் கண்மாய் appeared first on Dinakaran.

Tags : Kannamai ,Sinnamanur ,CINNAMANUR ,Theni District ,Sarukulam ,Dinakaran ,
× RELATED ஆலோசனை கூட்டம்