×

தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வெழுதிய மகள்

உளுந்தூர்பேட்டை: தந்தை இறந்த சோகத்திலும் மகள் பிளஸ் 2 தேர்வெழுத சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகா கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயலு (52), மிளகாய் வியாபாரி. நேற்று காலை மடப்பட்டு கிராமத்தில் இருந்து செரத்தனூருக்கு சைக்கிளில் மிளகாய், மல்லி பொருட்களை எடுத்துக்கொண்டு வியாபாரத்திற்கு சென்றார். செரத்தனூர் பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது அந்த வழியாக பின்னால் சென்ற கார் அதி வேகமாக சுப்பராயலு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் மற்றும் கால்கள் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.அங்கிருந்த பொதுமக்கள் அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுப்பராயலுவுக்கு சுகந்தி, சுகுணா, சுமி, அபி, அம்மு என 5 மகள்கள் உள்ளனர். இவருடைய கடைசி மகள் அம்மு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இன்று அவருக்கு ஆங்கில தேர்வு என்பதால் உறவினர்கள் பொதுத்தேர்வு எழுத அம்முவை பள்ளிக்கு கண்ணீருடன் அனுப்பி வைத்தனர். தந்தை இறந்த சோகத்திலும் மகள் அரசு பொதுத்தேர்வு எழுத சென்ற சம்பவம் கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

The post தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வெழுதிய மகள் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Subparayalu ,Karuvepilai Palayam ,Thiruvennainallur ,Villupuram district ,Madapattu ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...