×

அடிக்கல் நாட்டி 5 ஆண்டுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை: தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் என எம்பி தாக்கு

திருப்பரங்குன்றம்: மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி பட்ஜெட்டில் ஜப்பான் நாட்டு ஜெய்கா நிதிநிறுவனத்துடன், கடந்த 2021ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பீட்டில் 82% சதவீத தொகையான ரூ.1627.70 கோடி, ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள தொகையை ஒன்றிய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை. இதற்கிடையே, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு மதுரை அருகே, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் செய்முறை வகுப்பு நடத்த திட்டமிட்டு விடுதி, வகுப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வாடகை கட்டிடம் பிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2023 ஆகஸ்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்க பெற்ற நிலையில் கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை இன்று காலை நடந்தது.

இதில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து அனுமந்தராவ் கூறுகையில், ‘இன்று துவங்கிய எய்ம்ஸ் பணி 33 மாதங்களில் நிறைவடையும்’ என தெரிவித்தார். கண்துடைப்பு நாடகம் மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து தொடங்கியிருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு இடைவெளி என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும். மக்களவைத் தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்குகிறது ஒன்றிய அரசு. பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக 3 முறை தமிழ்நாடு வந்த பிரதமர், மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்கி வைக்காததற்கான காரணம் என்ன? இது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

 

The post அடிக்கல் நாட்டி 5 ஆண்டுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை: தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் என எம்பி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Bhoomi Pooja ,AIIMS ,Madurai ,Tiruparangunram ,Modi ,AIIMS Hospital ,Thopur, Madurai ,Japan ,JICA Finance Company ,Bhumi Pooja ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...