சென்னை: சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீட்டரில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்காக டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் தலா 3 பெட்டிகள் கொண்ட 36 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்வதற்காக அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துடன் ரூ.1215.92 கோடி மதிப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேலும் 32 ரயில்களை தயாரிப்பதற்காக டெண்டர் கோரியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம் முதலில் மூலதனச் செலவைக் குறைக்க சில ரயில்களை குத்தகை முறையில் எடுத்து பயன்படுத்த திட்டமிட்டது, ஆனால் பின்னர் திட்டம் மாற்றப்பட்டது.
தற்போது ரயில்களை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இம்முறை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம், 15 ஆண்டுகளுக்கு விரிவான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பிற்காலத்தில் உதிரிபாகங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கான செலவைச் சேமிக்க நாங்கள் இதைச் செய்கிறோம். தற்போது நகரில் 54 கிமீ முதல் கட்ட திட்டத்தில் இயங்கும் ரயில்களில் நான்கு பெட்டிகள் இருந்தாலும், இரண்டாம் கட்ட திட்டத்தில், மூன்று பெட்டிகள் மற்றும் ஆறு பெட்டிகள் கொண்ட இரண்டு வகையான டிரைவர் இல்லாத ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் வரும் காலங்களில் தயாரிக்கப்படும். இந்த ரயில்கள் சராசரியாக மணிக்கு 32 கிமீ வேகத்தில் பயணிக்கும். இரண்டாம் கட்ட திட்டமும் முழுமையாக செயல்பட்டதும், இந்த ரயில்கள் ஆண்டுக்கு சராசரியாக 1,50,000 கி.மீ. வரை ஓடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மேலும் 32 ரயில்கள் வாங்க டெண்டர் appeared first on Dinakaran.