×

அபுதாபியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான கழிவறையில் ரூ.3 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: ஆசாமிக்கு வலை

மீனம்பாக்கம்: அபுதாபியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தது. பின்னர் அந்த விமானம் உள்நாட்டு விமானமாக ஐதராபாத்துக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். அதனால் விமானத்தை ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் கழிவறையில் மின்சார வயர்கள் உள்ள கேபிள் பாக்ஸ் திறந்த நிலையில் இருந்தது. இதை பார்த்த ஊழியர்கள், விமான நிலைய மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அந்த கேபிள் பாக்ஸ் பகுதிக்குள் கருப்பு டேப் சுற்றப்பட்டிருந்த ஒரு பார்சல் இருந்தது. அதை பார்த்தபோது, தங்கம் இருப்பது போல தெரிந்தது. உடனே விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தங்க கட்டிகள் அடங்கிய பார்சலை பறிமுதல் செய்தனர். அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, 4.5 கிலோ எடையுடைய தங்க கட்டிகள் இருந்தன.

சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி. அவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்க கட்டிகளை கடத்தி வந்த ஆசாமி யார்? தங்க கட்டிகளை, விமான நிலைய கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, அதை விமான நிலைய ஊழியர்கள் மூலமாக வெளியில் எடுத்து வர திட்டமிட்டாரா? அல்லது ஐதராபாத்துக்கு உள்நாட்டு பயணியாக பயணம் செய்து, ஐதராபாத் விமான நிலையத்தில், தங்கத்தை வெளியில் எடுத்து செல்ல திட்டமிட்டு இருந்தாரா? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த விமானத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி, வெளியில் வரும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியவைகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ரூ.3 கோடி மதிப்புடைய 4.5 கிலோ தங்க கட்டிகள், விமானத்தின் கழிவறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post அபுதாபியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான கழிவறையில் ரூ.3 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: ஆசாமிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : IndiGo Airlines ,Abu Dhabi ,Chennai ,Asami ,Meenambakkam ,Chennai International Airport ,Hyderabad ,
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...