×

உற்சாகத்தில் முருக பக்தர்கள்! அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் இலவச சுற்றுலா நாளை தொடக்கம் : அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருத்தலங்களுக்கும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு முதல் இராமேசுவரத்திலிருந்து காசிக்கு பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் முதற்கட்டப் பயணம் கடந்த ஜனவரி 28 அன்று சென்னை, கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டப் பயணத்தில் பங்கேற்ற 207 மூத்த குடிமக்களும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் வருகின்ற மார்ச்-6 அன்று பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து தொடங்குகிறது. பின்னர், திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய திருக்கோயில்களுக்கு தரிசனம் செய்த பின் பழநியில் நிறைவடைகிறது.

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

The post உற்சாகத்தில் முருக பக்தர்கள்! அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் இலவச சுற்றுலா நாளை தொடக்கம் : அமைச்சர் சேகர்பாபு!! appeared first on Dinakaran.

Tags : Free Tourism Day ,Government for Six Houses ,Minister ,Sekarbabu ,Chennai ,Hindu Religious Institute ,Mansarovar ,Muqdinath ,Amman Temples ,Audi ,Vainava ,Puratasi ,Government ,Six Houses ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...