×

ஜெயலலிதாவின் 17 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை : கர்நாடக உயர்நீதிமன்றம் ஆர்டர்!!

பெங்களூரு : ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடக ஐகோர்ட் தற்காலிக தடை விதித்தது. கடந்த 1991- 96ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச‌ ஒழிப்புத் துறை போலீஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட என ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும். அந்த தொகையில் இவ்வழக்கிற்காக கர்நாடக அரசு செலவு செய்த பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள பணத்தை மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரினார்.

இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “ஜெயலலிதா தொடர்புடைய தங்க, வரை நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வருகிற மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக‌ உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வழக்கை நடத்துவதற்கு கர்நாடக அரசு செலவழித்த ரூ.5 கோடியை தமிழக அரசு செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார். இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தனித்தனியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கூடாது. அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரினர்.

இந்த மனுக்கள் இன்று நீதிபதி நவாஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தற்காலிக தடை விதித்த நீதிபதி நவாஸ், தீபக், தீபா மனுக்களுக்கு பதிலளிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post ஜெயலலிதாவின் 17 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை : கர்நாடக உயர்நீதிமன்றம் ஆர்டர்!! appeared first on Dinakaran.

Tags : JAYALALITHA ,TAMIL NADU GOVERNMENT ,KARNATAKA ,COURT ,Bangalore ,Karnataka Aycourt ,TAMILS ,Karnataka High Court ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...