×

திமுக அரசின் சாதனைகளை பொறுக்க முடியாமல் பொய் பிரசாரம்: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: திமுக அரசின் சாதனைகளைப் பொறுக்க முடியாமல் பொய் பிரசாரம் செய்கிறார் எடப்பாடி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார். தங்களது கூட்டணிப் பிரச்னைகளைக் கையாள முடியாமல், யார் வருவார் எனக் காத்திருக்கும் அவர், தி.மு.க. மீது அவதூறுகளைப் பேசி வருகிறார். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை அனைத்துத் தரப்பினரும் மனதாரப் பாராட்டி உள்ளனர். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எடப்பாடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். நாட்டிலேயே, முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை.

அண்ணாமலை ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பது போல பேசுகிறார், இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத். அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில் தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்துத் தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்கப் போதைப் பொருள் பரவலுக்குக் காரணம் பாஜ தான்.

போதைப் பொருள் விற்பனையில் பா.ஜ. தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது. பஞ்சாப்-ஷோன்தி (23 கிலோ ஹெராயின் வழக்கு) இவர் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர். அவரை அமித்ஷா கட்சியில் சேர்க்கிறார். அதேபோல பா.ஜ எம்.பியின் மகன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

கட்சியைச் சேர்ந்த ஒருவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாகச் செயல்பட்டது தெரிந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுத்தது திமுக. தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியைச் சிதைக்க முயற்சித்தார்கள்; அது நடக்கவில்லை. கூட்டணி வலுவாகத் தொடர்கிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தவறான பிரசாரம் செய்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தி.மு.க. செயல்பட்டது போல, கல்பாக்கம் விவகாரத்திலும் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு கூறினார்.

The post திமுக அரசின் சாதனைகளை பொறுக்க முடியாமல் பொய் பிரசாரம்: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Dimuka government ,Edapadi ,R. S. Bharati ,Chennai ,Eadapadi ,Secretary of State for Development ,R. S. ,Bharati ,Tamil Nadu ,Edappadi ,
× RELATED தோல்வி பயம் வந்துவிட்டதால்தான்...