×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு; பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை: அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுவது ஏற்க கூடியதல்ல. சட்டப்படி தான் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது. எனவே, தன்னை விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, வழக்கை 3 மாதங்களில் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார். இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 23வது முறையாக வரும் 6ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அல்லி நேற்று உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு ஏப்.4க்கு தள்ளிவைப்பு
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30க்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டது.

மத்திய குற்றபிரிவு போலீசார், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் 900 பேர் வரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை வழக்கறிஞர், வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்றார். இதையடுத்து விசாரணையை ஏப்ரல் 4க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு; பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை: அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Enforcement Department ,Sessions Court ,CHENNAI ,Former minister ,Puzhal Jail ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல்...