×

விருதுநகரில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

 

விருதுநகர், மார்ச் 5: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், விதவை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் வெம்பக்கோட்டை கங்கர்செவல் கிராமத்தில் அம்மாபொன்னு மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1லட்சம் நிவாரண தொகை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு ரூ.1.19 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள், 1 பயனாளிக்கு ரூ.13,750 மதிப்பிலான செல்போன் என ரூ.2.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37.15 கோடி கடன் வழங்கிய மத்திய கூட்டுறவு வங்கி மாவட்ட அளவிலான சிறந்த வங்கிக்கான விருது, சான்றிதழ் வழங்கினார்.

மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடனுதவி வழங்கிய கிளை வங்கிகளில் ரூ.5.18 கோடி கடன் வழங்கிய செட்டியார்பட்டி யூனியன் பங்க் ஆப் இந்தியா வங்கிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், ரூ.3 கோடி கடனுதவி வழங்கிய அருப்புக்கோட்டை கனரா வங்கிக்கு 2ம் பரிசு ரூ.10ஆயிரம், ரூ.2.50 கோடி கடனுதவி வழங்கிய மல்லி இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கிளைக்கு 3வது பரிசு ரூ.5ஆயிரம் வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராஜேந்திரன், திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், தனித்துறை ஆட்சியர் அனிதா உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post விருதுநகரில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,People's Grievance Day ,Virudhunagar Collector ,Collector ,Jayaseelan ,
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...