×

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே குறைந்த அளவில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள்: பயணிகள் கடும் அவதி; கூடுதலாக இயக்க வேண்டுகோள்

கூடுவாஞ்சேரி: தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, குறைந்த அளவே மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூடுதலாக பேருந்தகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை தடம் எண் 500, இதேபோல், தாம்பரத்திலிருந்து மறைமலைநகருக்கு தடம் எண் 118 ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை, சாதாரண பேருந்துகள், எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பேருந்துகள் என இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சாதாரண பேருந்தை மகளிருக்கு இலவச பேருந்தாக மாற்றிவிட்டனர். இதனால், மிகவும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சாதாரண பேருந்துகளில் ஒரு மடங்கும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் இரண்டு மடங்கும், சொகுசு பேருந்துகளில் மூன்று மடங்காகவும் பேருந்துகள் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இதில், சாதாரண பேருந்துகள் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல வேண்டும். எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்ல வேண்டும். ஆனால், எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பேருந்துகள் அனைத்தும் எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றன. இதனால், அவசர ஆபத்து மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் செல்ல முடியாமல் பேருந்து பயணிகள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் தலையிட்டு அதிக பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

* நிறுத்தத்தில் நிற்பதில்லை
இலவச பேருந்து டிரைவர்கள் மகளிர் மற்றும் பள்ளி மாணவர்களை கண்டாலே சரிவர நிறுத்துவது கிடையாது. அதிவேகமாக ஓட்டி சென்று விடுகின்றனர். மேலும், பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்தாமல் 100 மீட்டர் தள்ளி நிறுத்துவதால் மாணவர்கள் மற்றும் பெண்கள் ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை வாடிக்கையாக உள்ளது. இதில், ஏற முடியாதவர்கள் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதில், சாதாரண பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தானநிலையில் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

* காத்துகிடக்கும் அவலம்
பேருந்துகள் குறைவாக இயக்குவதால், பேருந்து நிறுத்தங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், குறித்த நேரத்துக்கு எங்கும் சென்று வர முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்வதில்லை என பயணிகள் புகார் கூறுகின்றனர்.

The post தாம்பரம்-செங்கல்பட்டு இடையே குறைந்த அளவில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள்: பயணிகள் கடும் அவதி; கூடுதலாக இயக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tambaram-Chengalpattu ,Kuduvanchery ,Tambaram ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு...