×

லட்சக்கணக்கில் வருவாய் இருந்தும் ரயில்வே நிர்வாகம் மெத்தனம் சிசிடிவி கேமரா இல்லாத புறநகர் ரயில் நிலையங்கள்: பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி?

பெரம்பூர்: குற்ற செயல்களின் எண்ணிக்கையை குறைக்கவும், யார் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதை கண்டுபிடிக்கவும் காவல் துறையினருக்கு சிசிடிவி கேமரா உதவியாக இருந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை எங்காவது ஒரு இடத்தில் மட்டுமே தென்பட்ட சிசிடிவி கேமரா, தற்போது பரவலாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள், பொழுதுபோக்கு தளங்கள், வணிக வளாகங்கள், முக்கிய சாலைகள் என பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் ஓரளவிற்கு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. சிசிடிவி பதிவுகளால் கொள்ளையர்களை போலீசார் விரைந்து கைது செய்வதுடன், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர முக்கிய ஆதாரமாக இது உள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில், காவலாளிகளுக்கு பதிலாக சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு, தொடர்ந்து அந்த சிசிடிவியில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் போலீசாரின் தொடர் நடவடிக்கையால் பல்வேறு இடங்களில் சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்போர் நல சங்கம் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகளோடு இணைந்து போலீசார் பல்வேறு இடங்களிலும் சிசிடிவிகளை பொருத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை கட்டாயமாக்கியுள்ளனர்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பெரும்பாலான புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இதுவரை பொருத்தப்படவில்லை. இதனால், தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் புறநகர் ரயில் நிலையங்களில் செயின் பறிப்பு, வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் சென்ட்ரல் ரயில் நிலையம் முக்கியமானது. இந்த ரயில் நிலையத்தில் சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக புறநகர் ரயில்கள் செல்லும் பாதையான பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், பெரம்பூர் கேரேஜ், பெரம்பூர் லோகோ, வில்லிவாக்கம், கொரட்டூர், பட்டரவாக்கம், அம்பத்தூர், அண்ணனூர் வரை உள்ள ரயில் நிலையங்களில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் மட்டுமே சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது.

மற்ற எந்த ஒரு ரயில் நிலையங்களிலும் ஒரே ஒரு சிசிடிவி கூட பொருத்தப்படவில்லை. இது பொது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதோடு பல்வேறு சமூக விரோத செயல்கள் நிகழ்வதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பெரும்பாலான ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் வட மாநிலங்களில் இருந்து வரும் பெரும்பாலான மக்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மற்றும் பேருந்து மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கின்றனர்.

சமீப காலமாக வட மாநிலங்களில் இருந்து அதிகளவு குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கெடுபிடிகள் அதிகம் இருக்கும் என்பதால், பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெரும்பாலான நபர்கள் இறங்கி அங்கிருந்து தங்களது வாகனம் மூலம் வட மாநிலங்களில் இருந்து தாங்கள் கடத்தி வந்த போதைப் பொருட்களை சென்னையின் பல்வேறு இடங்களுக்கு எடுத்து செல்கின்றனர்.

இவ்வாறு பலமுறை பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட முன் பகுதியில் கஞ்சா பிடிக்கப்பட்டு செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு பின்புறம் உள்ள பகுதி ஓட்டேரி காவல் நிலையத்திற்கு வரும். அந்த பகுதியிலும் பெரும்பாலான இடங்களில் வட மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கஞ்சாவை ஆட்டோவில் ஏற்றி செல்லும் போது, ஓட்டேரி போலீசார் அவர்களை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்ந்து இது போன்ற செயல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இருந்த போதும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன், இங்கு நடைமேடை ஒன்றில் இருந்த ஒரு பையை சோதனை செய்தபோது அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அதை கொண்டு வந்தது யார் என தெரியாமல் ரயில்வே போலீசார் மதுவிலக்கு போலீசாரிடம் கஞ்சாவை மட்டும் ஒப்படைத்து விட்டனர்.

இவ்வாறு பல்வேறு பிரச் னைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளன. இதே போன்று புறநகர் வழியாக செல்லும் ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கூட பட்டரவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதியில் மாணவர்கள் மிக கடுமையாக மோதிக் கொண்டனர். ஆனால் ஒரு இடத்தில் கூட சிசிடிவி காட்சியில் அவர்கள் அடித்துக் கொண்ட சம்பவங்கள் பதிவாகவில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருந்த போதிலும் ரயில்வே நிர்வாகத்தினர் புறநகர் பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ரயில் நிலையங்கள் ஒவ்வொன்றும் நவீனமயமாக்கப்படும் என தொடர்ந்து ஒன்றிய அரசு கூறி வந்த போதிலும், அடிப்படை தேவைகளை கூட ஒன்றிய அரசால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் புறநகர் ரயில் நிலையங்களில் உடனடியாக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* ஒன்றிய அரசின் தோல்வி
ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாதது குறித்து எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின் நிர்வாக தலைவர் சூரிய பிரகாஷ் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளாகவே ரயில்வே துறையில் பல குறைபாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில்வே நிர்வாகத்தை திறம்பட ஒன்றிய அரசு நடத்த முடியாமல் ரயில் நிலையங்களையும், ரயில்களையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் பெரும்பாலான ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. குறிப்பாக புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அறவே கிடையாது. பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் ரயில் நிலையங்களில் கூட சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் பொதுமக்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

24 மணி நேரமும் அனைத்து நிகழ்வுகளையும் ரயில்வே போலீசார் கண்காணிக்க முடியாது. எனவே சிசிடிவி கேமராக்கள் இருக்கும் பட்சத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளை தடுக்க முடியும். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருகிறது. பெரம்பூர் உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையங்களில் உடனடியாக ரயில்வே நிர்வாகத்தினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தாவிட்டால் எங்களது தொழிற்சங்கம் சார்பில் பொதுமக்களின் நலன் கருதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,’’ என்றார்.

* 10 சதவீதம் கூட கிடையாது
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் மென்பொறியாளர் சுவாதி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 442 ரயில் நிலையங்களில் 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024-25ம் நிதி ஆண்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று ரயில்வே துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ரயில் நிலையங்களின் பாதுகாப்பில் ரயில்வே நிர்வாகத்தின் அக்கறையின்மையை இந்த அறிக்கை காட்டுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு இவ்வளவு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்வது ஏன் என்று கேட்டனர்.

அதற்கு ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நிதி, தவணை முறையில் வழங்கப்படுவதால் இந்த கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவீத ரயில் நிலையங்களில் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை.

ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடைமுறையை விரைவுப்படுத்த வேண்டும். இது போன்ற விஷயங்களுக்கு நிதியை காரணம் காட்டக்கூடாது. எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அதற்கான கால அட்டவணையை தெரிவிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post லட்சக்கணக்கில் வருவாய் இருந்தும் ரயில்வே நிர்வாகம் மெத்தனம் சிசிடிவி கேமரா இல்லாத புறநகர் ரயில் நிலையங்கள்: பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி? appeared first on Dinakaran.

Tags : Perambur ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு