×
Saravana Stores

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பாழடைந்து காணப்படும் குளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில், பாழடைந்து வரும் ஒக்கப்பிறந்தான் குளம் மற்றும் குளக்கரை பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தில், கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்போது அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.20 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மடம் தெரு அண்ணா நூற்றாண்டு பூங்கா ரூ.2.40 கோடி மதிப்பீட்டிலும், மஞ்சள் நீர் கால்வாயில் வெள்ள தடுப்பு சுவர், ஒக்கப்பிறந்தான் குளக்கரையில் நடைபாதை, இருக்கைகள் அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட அழகுப்படுத்தும் பணிக்காக ரூ.2.58 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன.

அதன் அடிப்படையில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காஞ்­சி­புரம் ஒக்­கப்­பி­றந்தான் குளத்தை சுற்றி தடுப்பு சுவர், உட்புறம் கம்பி தடுப்பு, நடை­பாதை, பொது­மக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கை வசதி, கழிப்­பறை, குளத்தை சுற்றி மின் விளக்கு வச­திகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. மேலும், குளக்கரை பூங்கா பாதுகாப்புக்காக காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டு இருந்தார். இதனால், குளக்கரை பூங்கா ஆரம்பத்தில் ஒளிமயமாக காட்சி அளித்தது. அதன்பிறகு, ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பாதுகாவலர் பணிக்கு யாரும் வராததால், குளக்கரையில் சமூக விரோதிகள் நட­மாட்டம் அதி­க­மா­னது. குளக்கரையில் மது அருந்த தொடங்கிய குடிமகன்கள், மதுபாட்டில்களை உடைத்தும், கழிப்பறை கதவு மற்றும் சிமென்ட் தரையை உடைத்து விட்டு செல்­கின்­றனர்.

குளக்கரை பூங்காவில் இருந்த மின் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மின் விளக்கு வெளிச்சம் இல்லாததால் இப்பூங்கா இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறிவிட்டது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. இந்நிலையில், மடம் தெரு அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா முறையாக பராமரிக்கப்படுவதால் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று வருகின்றனர்.

அதேபோன்று, ஒக்கப்பிறந்தான் குளம் மற்றும் குளக்கரை பூங்கா பராமரிக்கப்பட்டால் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளைய தெரு, புத்தேரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதுடன், பொதுமக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு இடமாகும் மாறும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் இந்த குளக்கரை பூங்காவை முழுமையாக சீரமைத்து, பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பாழடைந்து காணப்படும் குளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kancheepuram Pilliyarpalayam ,Kanchipuram ,Kanchipuram Pilliyar Palayam ,Okkappiranthan pond ,DMK ,Anna ,
× RELATED மழைநீர் அகற்றும் பணியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ, மேயர்