×

சன்ரைசர்ஸ் அணிக்கு கம்மின்ஸ் கேப்டன்

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன், மார்ச் 22ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையொட்டி, போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் வீரர்கள் ஒருங்கிணைப்பு, பயிற்சியாளர்கள் தேர்வு, கேப்டனை அறிவிக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் (30 வயது) நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த தொடரில் கேப்டனாக இருந்த தென் ஆப்ரிக்க வீரர் எய்டன் மார்க்ரமுக்கு பதிலாக கம்மின்ஸ் வாய்ப்பு பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இவர் முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பையை வென்றுள்ளதால், சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரலேிய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடைசி மற்றும் 2வது டெஸ்ட் மார்ச் 12ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு சன்ரைசர்ஸ் அணியுடன் கம்மின்ஸ் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் கம்மின்ஸ். ஆனால் சர்வதேச போட்டிகளை கருத்தில் கொண்டு 2023ம் ஆண்டு ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

* இந்த ஆண்டுக்கான தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 23ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஈடன் கார்டனில் எதிர் கொள்கிறது. ஐதராபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மார்ச் 27ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் எஸ்ஆர்எச் மோதுகிறது.

The post சன்ரைசர்ஸ் அணிக்கு கம்மின்ஸ் கேப்டன் appeared first on Dinakaran.

Tags : Cummins ,Sunrisers ,Hyderabad ,Pat Cummins ,Sunrisers Hyderabad ,IPL T20 series ,Chennai ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...