×
Saravana Stores

தமிழ்நாடு அணியுடன் ரஞ்சி அரையிறுதி இன்னிங்ஸ், 70 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி: 48வது முறையாக பைனலுக்கு முன்னேறியது

மும்பை: தமிழ்நாடு அணியுடன் நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதியில், இன்னிங்ஸ் மற்றும் 70 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற மும்பை அணி 48வது முறையாக பைனலுக்கு முன்னேறி அசத்தியது. பந்த்ரா குர்லா வளாக மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 2வது நாள் முடிவில் 9விக்கெட் இழப்புக்கு 353 ரன் எடுத்திருந்தது.

3ம் நாளான நேற்று அந்த அணி 378 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. ஷர்துல் தாகூர் 109, முஷீர் 55, ஹர்திக் தமோர் 35, கேப்டன் ரகானே 19, லால்வானி 15 ரன் எடுத்தனர். கடைசி விக்கெட்டுக்கு தனுஷ் கோடியன் – துஷார் பாண்டே ஜோடி 88 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தேஷ்பாண்டே 26 ரன் எடுத்து அவுட்டானார். தனுஷ் கோடியன் 89 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட், குல்தீப் சென் 2, வாஷிங்டன் சுந்தர், சந்தீப் வாரியர் தலா 1 விக்கெட் வீழத்தினர்.

232 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு, முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 8 ஓவரில் 10 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. கடுமையாகப் போராடிய இந்திரஜித் 70 ரன் (105 பந்து, 9 பவுண்டரி), பிரதோஷ் ரஞ்சன் பால் 25, விஜய் சங்கர் 24, சாய் கிஷோர் 21 ரன்னில் பெவிலியன் திரும்ப, பின்வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தனர். தமிழ்நாடு அணி 2வது இன்னிங்சில் 162 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

மும்பை தரப்பில் முலானி 4, ஷர்துல் தாகூர், மோகித் அவஸ்தி, தனுஷ் கோடியன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இன்னிங்ஸ் மற்றும் 70 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற மும்பை அணி 48வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. ஏற்கனவே அந்த அணி 41 முறை ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

* போராடுகிறது விதர்பா
நாக்பூரில் நடக்கும் முதல் அரையிறுதியில் மத்தியபிரதேச அணியுடன் மோதும் விதர்பா அணி 2வது இன்னிங்சில் கடுமையாகப் போராடி கணிசமான முன்னிலை பெற்றுள்ளது. விசிஏ மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் விதர்பா 170 ரன், மத்திய பிரதேம் 252 ரன்னுக்கு ஆல் அவுட்டாகின. 82 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா, 2வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன் எடுத்திருந்தது.

நேற்று நடந்த 3ம் நாள் ஆட்டத்தின் முடிவில் விதர்பா 6 விக்கெட் இழப்புக்கு 343 ரன் குவித்துள்ளது. துருவ் 40, அக்‌ஷய் வாகரே 1, அமன் மோகடே 59, கருண் நாயர் 38, கேப்டன் அக்‌ஷய் வாத்கர் 77 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். யாஷ் ரத்தோட் 97 ரன், ஆதித்யா சர்வதே 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். மத்திய பிரதேசம் தரப்பில் குமார் கார்த்திகேயா, அனுபவ் அகர்வால் தலா 2, ஆவேஷ் கான், குல்வந்த் கஜோரோலியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 4 விக்கெட் இருக்க 261 ரன் முன்னிலையுடன் விதர்பா அணி இன்று 4வது நாள் சவாலை சந்திக்கிறது.

The post தமிழ்நாடு அணியுடன் ரஞ்சி அரையிறுதி இன்னிங்ஸ், 70 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி: 48வது முறையாக பைனலுக்கு முன்னேறியது appeared first on Dinakaran.

Tags : Ranji semi-final ,Tamil Nadu ,Mumbai ,Ranji Trophy ,final ,Bandra Kurla ,Ranji ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு...