×

தமிழ்நாட்டை பின்பற்றி இமாச்சல், டெல்லியிலும் மகளிர் உதவித் தொகை: காங்., ஆம் ஆத்மி அரசுகள் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு டெல்லியில் ஆம் ஆத்மி அரசும், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசும் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளன. குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் 1.16 கோடி பெண்கள் பலனடைந்து வருகின்றனர். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த வரிசையில் டெல்லி, இமாச்சல் பிரதேசமும் இணைந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு மாநில பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தது. அதில், 18 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என நிதி அமைச்சர் அடிசி அறிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போல, காங்கிரஸ் ஆளும் இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை நேற்று அறிவித்தார். இந்திராகாந்தி பியாரி பெஹ்னா சுக் சம்மன் நிதி யோஜனா என பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 60 வயதுடைய பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என முதல்வர் சுகு தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் 5 லட்சம் பெண்கள் பலன் அடைவார்கள்.

The post தமிழ்நாட்டை பின்பற்றி இமாச்சல், டெல்லியிலும் மகளிர் உதவித் தொகை: காங்., ஆம் ஆத்மி அரசுகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Himachal ,Delhi ,Congress ,AAP governments ,New Delhi ,Aam Aadmi Party government ,Congress government ,Himachal Pradesh ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...