×

பட தயாரிப்புக்காக கடன் வாங்கி திரும்ப தராத விவகாரம்; ஆடிட்டர் கேட்ட ஆவணத்தை தர நடிகர் விஷாலுக்கு அவகாசம்:உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் தன்னிடம் ஆவணங்களை கேட்டுள்ளதாகவும், அவற்றை வழங்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் நடிகர் விஷால் கேட்டதையடுத்து விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

‘விஷால் பிலிம் பேக்டரி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு அந்த பணத்தை செலுத்தியது. அந்த தொகையை திருப்பி தராததால் நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 15 கோடி ரூபாயை வழக்கு கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்திருந்தது. இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவருக்கும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய ஆடிட்டர் கிருஷ்ணா என்பவரை நியமித்து 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கும் விவரங்களையும், இன்றைய நாள் வரைக்குமான வங்கி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் சில ஆவணங்கள் கேட்டு தனது ஆடிட்டருக்கு அனுப்பிய கடிதம் தற்போது தான் கிடைத்துள்ளது. அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

The post பட தயாரிப்புக்காக கடன் வாங்கி திரும்ப தராத விவகாரம்; ஆடிட்டர் கேட்ட ஆவணத்தை தர நடிகர் விஷாலுக்கு அவகாசம்:உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vishal ,Chennai ,Chennai High Court ,Vishal Film Factory ,Supreme Court ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…