- மோடி
- கல்பக்கம் புதிய அணுசக்தி நிலையம்
- சென்னை
- பாவினி அணு மின் நிலையம்
- கல்பாக்கம் அணு மின் நிலையம்
- காங்கிரஸ்
- கல்பக்கம் நியூ அணுசக்தி எனுல்
- தின மலர்
சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கூடுதலாக 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி அணுமின் ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அங்கு பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்கனவே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்து சென்னை அணு மின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்குகிறது. இந்நிலையில் இதே அணு மின் நிலைய வளாகத்தில் கூடுதலாக 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி அணு மின் திட்டம் (அதிவேக ஈனுலை) ஒன்றை கடந்த 2002ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்தார். இப்பணிகள் முடியுறும் நிலையில் நேற்று மாலை 4.13 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.
அவரை அணு மின் நிலைய இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்று 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி அதிவேக ஈனுலை பிரிவுக்கு அழைத்து சென்றனர். அதனை பார்வையிட்டு பிரதமர் மோடி ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை துவக்கி வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கல்பாக்கத்தில் இந்தியாவின் முதலாவது உள்நாட்டு வேக ஈனுலையில் (500 மெகாவாட்) கோர் லோடிங் பணியை பிரதமர் மோடி பார்வையிட்டார். கோர் லோடிங் பணி முடிந்தவுடன், முதல் அணுகுமுறை நிறைவடைந்து, பின்னர் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும். பிரதமர், அணு உலையின் பெட்டகம், கட்டுப்பாட்டு அறையை சுற்றிப் பார்த்தார். இந்த அணு உலையின் முக்கிய அம்சங்கள் குறித்து அவரிடம் விளக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிறகு அணு மின் நிலைய வளாகத்திலிருந்து மாலை 5.20 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு சென்றார். பிரதமர் வருவதற்கு முன் வெங்கப்பாக்கம் இசிஆர் கூட்ரோடு பகுதிக்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் வந்த 50க்கும் மேற்பட்ட காங்கிரசார் திடீரென இசிஆர் சாலையில் கருப்பு பலூன்களை பறக்க விட்டு, கருப்புக் கொடிகளுடன் ‘‘கோ பேக் மோடி” என்று மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அடைத்தனர். காங்கிரசாரின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post கல்பாக்கம் புதிய அணுமின் ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்: காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.