×

வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை

தூத்துக்குடி, மார்ச் 4: ஒன்றிய அரசு திட்டம் எது? மாநில அரசு திட்டம் எது? என்று கூட தெரியாமால் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசுவதோடு வாயால் வடை சுடுவதாக அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான சிறப்பு முகாம் கலெக்டர் லட்சுமிபதி முன்னிலையில் நடந்தது. தலைமை வகித்த வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்து 222 மையங்களில் இளம்பிள்ளை வாதம் என்ற நோயை தடுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 5ஆயிரத்து 379 பணியாளர்களை கொண்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 199 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறும். 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோயில் திருவிழாக்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கல்யாண நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் நலனுக்காக அங்கன்வாடி மையங்கள் மூலமாக ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் சமூகநலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரக்கூடிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அனைத்தும் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்காகவும், நவீனபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் வீடு இல்லாத 8 லட்சம் குடும்பங்களுக்கு ₹3.5 லட்சம் ஒதுக்கீட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி கொடுப்பதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசு திட்டம் எது- மாநில அரசு திட்டம் எது? என்றெல்லாம் தெரியாமல் பேசி வருகிறார். தோல்வி பயத்தில் உளறும் அவர், பேசுவது உண்மையா எனக்கூட தெரியாமல் வாயால் வடை சுடுகிறார்’’ என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், மாவட்ட சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் பொற்செல்வன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இலக்கிய அணி மாவட்டத் தலைவர் நலம் ராஜேந்திரன், மாநகர அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சுழல் அணி தலைவர் வினோத், வக்கீல் அணி மாநகர துணை அமைப்பாளர் வக்கீல் ரூபஸ், டாக்டர் மகிழ்ஜான், கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, சரவணக்குமார், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டப்பிரதிநிதிகள் துரை, புஷ்பராஜ், பாஸ்கர், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா மற்றும் மணி, அல்பட் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Thoothukudi ,Union ,Minister ,Geethajeevan ,Tamil Nadu ,BJP ,President ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...