×

திருச்சியில் 1,695 மையங்களில் போலியோ முகாம் 1.93லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கலெக்டர் தகவல்

திருச்சி, மார்ச் 4: திருச்சி மாவட்டத்தில் நேற்று 1695 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் மூலம் 1லட்சத்து 93 ஆயிரத்து 963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று பிறந்தது முதல் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்து வாய்வழியாக வழங்கப்படுகிறது.

கடந்த 27.3.2014 அன்றே இந்தியாவில் போலியோ நோய் தாக்கம் இல்லை என்று சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் அண்டை நாடுகளில் போலியோ நோயின் தாக்கம் இருப்பதால் தொடர்ந்து இந்தியாவிலுள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில், பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

ரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய பகுதியிலுள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் திருச்சியிலுள்ள அனைத்து பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலாதலங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 52 இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் சொட்டு மருந்து வழங்க 63 நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் மார்ச் 3ம் தேதி முதல் மார்ச்5ம் தேதி வரை ரயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று கிராமப்புறங்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்த 969 குழந்தைகளுக்கும், நகர்ப்புறங்களில் 66 ஆயிரத்து 994 குழந்தைகளுக்கும், இடம் விட்டு இடம் பெயர்ந்துள்ள 91 குழந்தைகள் மற்றும் அகதிகள் முகாமில் உள்ள 81 குழந்தைகள் என மொத்தம் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 963 குழந்தைகளுக்கு ஆயிரத்து 695 முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஊரக பகுதிகளில் 102%-மும், நகா்ப்புறங்களில் 101.8%-மும் போலியோ சொட்டு மருந்து முகாம் வாயிலாக சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. எதிர்பார்த்ததைவிட 100%-க்கும் மேல் வீரப்பூர், சமயபுரம், கம்பரசம்பேட்டை ஆகிய ஊர்களில் நடைபெற்ற திருவிழாக்கள் மற்றும் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மக்கள் அதிக அளவில் முகாமுக்கு வந்து தங்கள் குழந்தைகளுக்கு ெசாட்டு மருந்து போட்டுக்கொண்டனர். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனைமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தற்போது நடந்து வரும் முகாமிலும் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளை அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமுக்கு அழைத்துச்சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்த அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணியன், அரசு அலுவலா்கள், மருத்துவ பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனா்.

The post திருச்சியில் 1,695 மையங்களில் போலியோ முகாம் 1.93லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Polio ,Trichy ,District Collector ,Pradeep Kumar ,Trichy district ,Tamil Nadu ,Polio camp ,
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...