திண்டுக்கல், மார்ச் 4: திண்டுக்கல் மாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிக்கண்ணன். இவர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் கடை வைத்துள்ளார். இவர், கடந்த 14-ந்தேதி காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கடைக்குள் சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1.80 லட்சத்தை காணவில்லை.
நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. அதேபோல் மணிக்கூண்டு அருகே ஒரு செல்போன் கடையில் ரூ.5 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுகுறித்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், வீரபாண்டி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த கடைகள், சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் கரூர் கல்லுமடையை சேர்ந்த அஜய் (24), ராயனூரை சேர்ந்த ஹரிகரன் (21), வெங்கமேட்டை சேர்ந்த மாரிமுத்து (21), கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சத்தியசீலன் (23) ஆகியோர் 2 கடைகளிலும் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும், போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பழநி, ஆயக்குடியில் 2 ஸ்டூடியோ கடைகளில் பூட்டை உடைத்து 3 விலை உயர்ந்த கேமராக்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் திருடிய பணம், 3 கேமராக்கள், 3 செல் போன்கள், 2 இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post திண்டுக்கல், பழநி பகுதிகளில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து திருடியவர்கள் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.