×

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது: 1200 கிலோ பறிமுதல்

 

அம்பத்தூர், மார்ச் 4: சென்னை பெரம்பூர் அருகே தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் உத்தரவின் பெயரில், கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், துணை கண்காணிப்பாளர் சம்பத் அறிவுறுத்தலின்படி, சென்னை வடக்கு அலகு காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பெரம்பூர் மாநகராட்சி உருது பள்ளி அருகே லோடு வேனில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்த இருவர் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் செம்பியம் பகுதியை சேர்ந்த பாண்டியன் (33), வியாசர்பாடியை சேர்ந்த அருள்ராஜ் (58) என்பதும், இவர்கள் பெரம்பூர், செம்பியம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியைப்பெற்று ஆந்திர மாநிலம் தடாவிற்கு கடத்தி சென்று அங்குள்ள சாலையோர கடைகளுக்கு அதிகவிலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது: 1200 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Civil Supplies Crime Investigation Department ,Tamil Nadu government ,Perampur, Chennai ,
× RELATED ரேசன் பொருட்களை கடத்தி விற்க முயற்சி...